^நிலவில் கால்பதித்து 50 ஆண்டு நிறைவு!

Published On:

| By Balaji

நிலவில் மனிதர்கள் கால்பதித்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள் மற்றும் தலைவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் கூகுள், இன்று (ஜூலை 19), நிலவில் மனிதர்கள் கால்பதித்த 50 ஆம் ஆண்டை நினைவு கூறும் விதமாக அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பண்டைய கால மனிதர்கள் போற்றி, வியந்து பாராட்டி வந்த நிலவின்மீது மனிதர்களும் கால் பதிக்க முடியும் என்று நிரூபித்த நாள் இன்று. 1969 ஆம் ஆண்டு இதே நாளில் தான், அப்போலோ 11 விண்கலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசாவால்’ விண்ணில் ஏவப்பட்டு தரையிறங்கியது.

நிலவில் முதன்முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடன் பயணம் செய்த பஸ் ஆல்டீரினையும், விண்வெளி வீரர்கள் நிலவில் கால் பதித்த செய்தியினை பூமிக்கு தெரிவித்த மைக்கேல் காலின்சையும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

இன்று கூகுள் வெளியிட்டிருக்கும் இந்த டூடுல் அனிமேஷன் வீடியோவிற்கு விண்வெளி வீரர் மைக்கேல் காலின்ஸ் (88), பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நாமும் விண்ணில் பயணம் செய்கிறோம் என்ற உணர்வை தூண்டுகிறது.

அந்த வீடியோ காட்சியில், ’விண்கலம் புறப்படப்போகிறது 6, 5, 4, 3, 2, 1, 0… ராக்கெட் புறப்படப் போகிறது.. புறப்பட்டுவிட்டது..’ என்ற அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு, மைக்கேல் காலின்ஸ் பேசுவார். “ஹாய் நான் மைக்கேல் காலின்ஸ், அப்போலோ 11ல் விண்வெளி வீரராக இருந்தேன். 50 வருடங்களுக்கு முன்பு, விண்வெளிக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங்க், பஸ் ஆல்டீரினுடன் நானும் பயணம் செய்தேன். அவர்கள் இருவரும் நிலவில் கால் பதித்த போது நான் சந்திர சுற்றுப் பாதையில் இருந்தேன். அங்கிருந்து தான் நாங்கள் பூமிக்கு திரும்புவோம்” என தெரிவிக்கிறார்.

தொடர்ந்து, “1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி காலை உணவை முடித்துவிட்டு விண்வெளிக்குப் புறப்பட்டோம். எங்கள் மூவருக்கும் பூமியின் மொத்த எடையையும் சுமந்துக் கொண்டு போவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது” என்றார். மனிதர்கள் முதன்முதலில் நிலவில் கால் பதிப்பதற்காக, பொறியியலாளர்கள், விண்வெளியில் அணிவதற்கான ஆடை தயாரிப்பாளர்கள் என கிட்டத்தட்ட நான்கு லட்ச பேர் வேலை செய்ததாக மைக்கேல் காலின்ஸ் கூறுகிறார். “அன்று நாங்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் சிறந்தது என்று நினைத்திருந்தோம். ஆனால் இன்று இருக்கும் தொழில்நுட்பத்தைவிட குறைவுதான். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருந்ததால், சூரிய ஒளி எங்கள்மீது விழும். அப்போலோ 11 வெப்பநிலையை சீராக்குவதற்காக பக்கவாட்டில் சுழன்றுக் கொண்டே இருக்கும். இதனை பார்பெக்யூ ரோல் என்று அழைப்போம். அதாவது, பார்பெக்யூ சிக்கன் சுழன்றுக் கொண்டிருப்பதைப் போல நாங்கள் சுழன்றுக் கொண்டிருந்தோம். நிலவினை அருகில் பார்த்த போது அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு மிரண்டுவிட்டோம். நிலவினை சூழ்ந்திருந்த பொன்னிறமான ஒளிவட்டம் எங்களது ஜன்னல்களில் முழுவதும் நிறைந்திருந்தது. அருகில் இருந்தபடி நிலவினை பார்ப்பது அழகாக இருந்தாலும், அங்கிருந்து நம்முடைய பூமியை பார்க்கும் போது அளவுக்கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. நம்முடைய பூமி விவரிக்க முடியாத அழகாக இருந்தது.

கிட்டத்தட்ட ராக்கெட்டில் எரிப்பொருள் தீர்ந்துப் போகும் நிலையில் தான் நீல் ஆம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்டீரினும் ஜூலை 20 ஆம் தேதி, நிலவில் கால் பதித்தார்கள். அமெரிக்க கொடியையும், ‘இந்த பயணம் மனிதகுலத்திற்கான மாபெரும் பாய்ச்சல்’ என்ற பதாகையையும் ஊன்றி வைத்தார்கள்’ என்று கூறிய மைக்கேல் தனி மனிதராக நிலவிற்கு சில மைல் தூரத்தில் மகிழ்ச்சியாக சூடாக தேனீர் குடித்தேன் என்று தனது பயணத்தை விவரித்துள்ளார். பின்னர், ஜூலை 24 ஆம் தேதி தாங்கள் பூமியை வந்து சேர்ந்ததாக தெரிவித்தார். இறுதியாக, “ஹியூஸ்டன், அப்போலோ 11ல் இருந்து மைக்கேல் காலின்ஸ் பேசுகிறேன். உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி” என்று முடிக்கிறார்.

இது போல பல வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்களையும், பிரபலங்களின் பிறந்த தினங்களையும் கூகுள் டூடுல் வழியாக உலகிற்கு தெரிவித்து வருகிறது. இது இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெரிதும் பயனளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

**

மேலும் படிக்க

**

**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share