பா.சிவராமன்
புதிய திவாலா சட்டம்: காலைப் பதிப்பில் வந்த **[மூடப்பட்ட ரத்னா ஸ்டோர்ஸும் தொழிலாளர்களும்!](https://www.minnambalam.com/k/2018/12/09/11)** கட்டுரையின் தொடர்ச்சி…
இப்புதிய ஐபிசி திவாலா சட்டத்தின் கீழ் தனியொரு தொழிலாளிகூட தனக்குச் சேர வேண்டிய பணத்தை அவரது நிறுவனம் செலுத்தத் தவறினால் இந்நிறுவனத்தை ஐபிசி சட்டத்தின் கீழ் என்சிஎல்டி தீர்ப்பாயம் முன் கொண்டுவந்து சட்டப்படி அந்நிறுவனத்தை திவாலாக்கும் நடைமுறையைத் துவங்கலாம். இதற்கு பயந்துகொண்டு, இத்தகைய நிறுவனங்கள் தொழிலாளர் நிலுவைத் தொகைகளை உடனடியாகச் செலுத்த நேரிடும்.. நீதிமன்றம் சென்று நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கோணத்திலிருந்து பார்த்தால் இது வரவேற்கத்தக்க மாற்றமே.
ரத்னா ஸ்டோர்ஸுக்கு முன்னர் இதே சென்னையில் அருணா ஹோட்டல் என்ற நிறுவனத்தின் தொழிலாளர்கள் சம்பளம் கொடுக்கப்படாததால் அதை என்சிஎல்டி முன்பு கொன்டுவந்து நிறுத்தினர். டெல்லியிலும் அப்ளைட் எலெக்ட்ரோமேக்னெட்டிக் என்ற நிறுவனத்தின் தொழிலாளர்களும் ஊதிய நிலுவைக்காக அதை என்சிஎல்டிக்கு முன்பு கொண்டுவந்து நிறுத்தினர்.
கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் நலிவுற்றுப்போன தொழில்கள் பிரச்சினை முன்னர் நலிவுற்ற தொழில் நிறுவனங்கள் சட்டம் (SICA) 1985இன் கீழ் தொழில்ரீதியான மற்றும் நிதிரீதியான மறுகட்டமைப்பு பீரோ (Bureau of industrial and Financial Reconstruction/BIFR)) என்ற அமைப்பின் கீழ் கையாளப்பட்டன. 2016இலிருந்து இத்தகைய நிறுவனங்கள் ஐபிசி மற்றும் என்சிஎல்டியின் கீழ் கொண்டுவரப்பட்டன. நிறுவனமொன்றின் நிகர மதிப்பு 50%க்குக் குறைந்துவிட்டால் அது உடனடியாக BIFR க்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அந்நிறுவனத்தின் மொத்த நஷ்டங்கள் ஏதேனும் ஒரு நிதியாண்டில் அதன் நிகர மதிப்பைத் தாண்டினால் அது உடனடியாக BFIR கீழ் கொண்டுவரப்பட்டு ஒன்று புதிய முதலாளிகளுக்கு விற்கப்படும் அல்லது நிறுவனமே கலைக்கப்பட்டு ஏறக்கட்டப்படும். அந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு BIFR க்கு காலக்கெடு எதுவும் கிடையாது. அதோடு ஒப்பிடுகையில் ஐபிசி – என்சிஎல்டி ஓரளவுக்கு அனுகூலமானதே.
**பாதகமே அதிகம்**
ஆனால் ஐபிசி – என்சிஎல்டியின் பாதக அம்சங்கள் சாதக அம்சங்களை விஞ்சி நிற்கின்றன. காரணம் என்சிஏல்டியின் கீழ் ஒரு நிறுவனம் திவாலாக்கப்பட்டு விற்க்கப்படும்போது வந்த தொகையில் தொழிலாளருக்கு முந்தைய 12 மாதங்களில் எவ்வுளவு ஊதிய பாக்கி இருந்ததோ அந்த அளவுக்கு மட்டுமே முதலில் திருப்பித் தரப்படும். மற்ற எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டு இன்னமும் பணம் ஏதாவது மிஞ்சி இருந்தால் மட்டுமே எஞ்சிய நிலுவைத் தொகை தொழிலாளருக்கு திருப்பிக் கொடுக்கபப்படும். அப்படிப் பார்த்தால் தொழிலாளருக்கு முழுத் தொகை கிடைப்பது அரிது.
இரண்டாவதாக, ஒரு லட்சத்திற்கு மேல் நிலுவை இருந்தால் மட்டுமே ஒரு தொழிலாளி என்சிஎல்டியை அணுக முடியும்.நிலுவைத் தொகை ஒரு கோடிக்கு மேல் இருந்தால் அதை என்சிஎல்டி முன்பு கோர முடியாது. புதிய திவாலா சட்டத்தில் தொழிலாளர்கள் தத்தம் நிலுவைத்தொகைகளுக்காகத் தனிநபர் ரீதியாக மட்டுமே என்சிஎல்டியை அணுகமுடியுமே தவிர தங்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள பிரச்சினை என்று பொது வழக்காக (class action suit) அதை அணுக முடியாது. எடுத்துக்காட்டாக, ஒரு தொழிலாளிக்கு ரூ. 90,000 மற்றும் இன்னொரு தொழிலாளிக்கு ரூ.80,000 சம்பள பாக்கி இருந்தால் தனித்தனியாகவும் அவர்கள் என்சிஎல்டியை அணுக முடியாது, கூட்டாகவும் சேர்ந்து வர வேண்டிய தொகை ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளது என பொது வழக்கும் போட முடியாது.
ஐபிசி சட்டம் இயற்றப்பட்டவுடனேயே அது தொழிலதிபர்களை வேட்டையாடுகிறது என்று தொழிலதிபர்களுடைய சேம்பர்கள் அலறத் தொடங்கின. பாஜக அவர்களை பகைத்துக்கொள்ள விரும்பாததால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பயப்பட வேண்டாமென்று அவர்களுக்கு உத்தரவாதமளித்தார். மோடி அரசு பலவகை கார்ப்பரேட் குற்றங்களைக் குற்றப் பட்டியலிலிருந்து அகற்ற 14 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக்குழு ரூ.5 லட்சமோ அதற்கு மேலோ அபராதம் கட்ட வேண்டியிருந்த குற்றங்களைப் புரிந்த நிறுவனங்கள் மட்டுமே என்சிஎல்டியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது. இதை அரசு அநேகமாக ஏற்றுக்கொள்ளுமாதலால் தொழிலாளருக்கும் ரூ.5 லட்சத்துக்கு மேல் நிலுவை இருந்தால் மட்டுமே அவர்கள் அதை என்சிஎல்டியின் கீழ் கொண்டுவரலாம் என வரம்பை இன்னும் உயர்த்தலாம். இது இன்னும் அதிகமான தொழிலாளர்களுக்குப் பாதகமானது.
வங்கிகளிடம் தங்கள் நிறுவனங்களின் பெயரால் கடன் வாங்கி அந்தப் பணத்தைத் திருப்பிக் கட்டாமல் தங்களுடைய சொந்தக் கணக்குகளுக்குக் கள்ளத்தனமாகத் திசைதிருப்புவர்களை ரிசர்வ் வங்கி ‘வேண்டுமென்றே கடன் கட்டாதவர்கள்’ (wilful defaulters) என்று வகைப்படுத்துகிறது. அதுபோலவே பங்குதாரர்களிடமிருந்து மூலதனத்தைப் பெற்று வங்கிகளிடமிருந்து கடனைப்பெற்று முறையாக தொழில் நடத்தாமல் நிதிமோசடிகளில் ஈடுபட்டு வேண்டுமென்றே தங்கள் கம்பெனிகளை நஷ்டத்தில் ஆழ்த்தி திவாலாகும் நிலைக்குத் தள்ளி கடன் கொடுத்தவர்களுக்கு அதை திருப்பாமல் தொழிலாளருக்குச் சேர வேண்டியதைக் கொடுக்காமல் ஏய்க்கும் முதலாளிகள் ஏராளம்.
எடுத்துக்காட்டாக, என்சிஎல்டி விஷயத்திலேயே 2017 இல் முதல் 110 வழக்குகளில் திவாலாக்கும் பணியை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் (Resolution Professionals) இந்த 110 நிறுவனங்கள் ரூ.40,000 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய மோசடிகளால் வங்கிகளும் அரசும் மட்டுமின்றி அதிகமாக பாதிக்கப்படுவது தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும்தான்.
நிர்வாக முறைகேடுகளால் இங்கனம் நிறுவனம் திவாலாவாகும் விஷயங்களில் தீங்கியல் பாதிப்பு (law of torts) சட்டம் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பாய்ந்து அவர்களுக்கு நீதிவழங்கலாம். ஆனால் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைகளைச் செயற்கையாக முன்கூட்டியே குறைப்பது இந்தத் தீங்கியல் சட்ட கோட்பாடுகளுக்கு எதிரானது. அமெரிக்காவிலிருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தால் இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்படைந்தால் அவர்கள் அமெரிக்கச் சட்டப்படி அந்நாட்டிலேயே அந்நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி இருக்க, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியத் தொழிலாளர்களுக்கு தீங்கிழைத்து பாதிப்பு ஏற்படுத்தினால் அந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக ஏன் அப்படியொரு சட்டம் இயற்றக் கூடாது?
*(புதிய திவாலா சட்டத்தின் மேலும் சில நுணுக்கங்களுடன் கட்டுரையின் இறுதிப் பகுதி மாலைப் பதிப்பில்)*
�,