நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக, அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. அமமுகவினர் எவரும் எதிர்பாராத இந்தத் தோல்வியால் கட்சியின் நிர்வாகிகள் பலரும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அமமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் படலமும் நடைபெற்றுவருகிறது. ஆனால், இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாத தினகரன், “நிர்வாகிகள் விலகுவதால் அமமுகவுக்கு பாதிப்பில்லை. விலகும் முடிவு எடுத்துவிட்டவர்களை தடுக்க முடியாது. அந்த இடத்தில் வேறு நிர்வாகிகளை நியமித்துக்கொள்வோம். தொண்டர்கள்தான் கட்சியின் பலம். அவர்கள் யாரும் கட்சியிலிருந்து விலகவில்லை” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அமமுகவினர் மாற்று முகாம்களுக்கு செல்வதை தடுப்பதற்காக அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் தினகரன்.
இதன் பின்னணி தொடர்பாக விசாரித்தபோது, “தேர்தலில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் கடன்காரர்கள் ஆகிவிட்டனர் என்ற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் செலவுகளுக்கு என ஒரு மிகப்பெரும் தொகையை சசிகலா ஒதுக்கினார். அதிலும் சசிகலாவுக்காக எம்.எல்.ஏ பதவியை இழந்தவர்களுக்கு தனி கணக்கு போடப்பட்டு தொகை ஒதுக்கப்பட்டது.
ஆனால் சசிகலா கொடுத்த பணத்தை முழுமையாக செலவுகள் செய்யாமல் முக்கிய நிர்வாகிகள் பலர் பாதிப் பணத்தைப் பங்குபோட்டுக்கொண்டனர் என்று வேட்பாளர்கள் பலரும் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து ஜூன் முதல் வாரத்தில் அமமுக தலைமை அலுவலகத்தில் தோல்வி குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் செலவுகளுக்கு முறையான கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தினகரன் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால்தான் பலரும் மாற்று முகாம்களுக்கு போய்விட்டனர்” என்று குற்றம்சாட்டியவர்கள்,
தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிருப்தியால் வேறு கட்சிகளுக்கு செல்லும் நிர்வாகிகளை அமமுகவிலேயே தக்கவைப்பதற்கான முயற்சிகளில் தினகரன் தற்போது ஈடுபட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.
“அண்மையில் சிறையில் சசிகலாவை சந்தித்திருந்தார் தினகரன். அப்போது, நிர்வாகிகளை தக்கவைத்துக்கொள்ளவும் அதிமுகவில் உள்ளவர்களை அமமுகவுக்கு கொண்டுவரவும் சில ஆலோசனைகளை கூறியுள்ளார் சசிகலா. மேலும் இதற்காக புதிய பட்ஜெட் போட்டுக்கொடுத்து அனுப்பியுள்ளார். சசிகலாவின் அறிவுரைப்படி, சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கட்சியினர் வீட்டு விழாக்களில் கலந்துகொள்ளும் தினகரன், கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரையில் அனைவரையும் சிறப்பாக கவனித்து வருகிறார். இதனால் அமமுக நிர்வாகிகள் மிகுந்த குஷியில் உள்ளனர்” என்று தெரிவித்தனர்.
கட்சியை பதிவு செய்யும் பணிகளில் மும்முரம் காட்டிவரும் தினகரன், அதுவரை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளார். இந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் அமமுகவை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் இறங்கவுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
**[நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/07/12/48)**
**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**
**[நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/07/12/57)**
�,”