பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள மாணவிகளிடம் மட்டும் நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, சில மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி கைதானார். நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட நீதிமன்றங்களில் இவர்கள் மூன்று பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், இதுவரை மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் அளிக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் நிர்மலா தேவி மற்றும் முருகன் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது, இவர்கள் மூவரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நிர்மலா தேவி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி மூவரும் மதுரை மத்தியச் சிறையிலிருந்து பாதுகாப்புடன் வரவழைக்கப்பட்டு, நேற்று (நவம்பர்1) ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரகசிய அறையில் மூவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூவர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கை நீதிமன்றத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மொத்தம் உள்ள 145 சாட்சிகளில் எண் 2 முதல் 32 வரை உள்ள சாட்சிகளான கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோரிடம் ரகசியமாக விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார். அதே சமயம் முதல் சாட்சி மற்றும் எண் 33க்குப் பிறகு உள்ள மற்ற அனைத்துச் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மத்தியில் விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டார் நீதிபதி. இவ்வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உதவிப் பேராசிரியர் முருகன், “மரண பயத்தை ஏற்படுத்தி, நிர்மலா தேவியிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர் சிபிசிஐடி போலீசார். மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி ஒன்றும் சிறு குழந்தை அல்ல. எங்களைப் பற்றி நிர்மலா தேவி அளித்த தகவல்கள் அனைத்தும் பொய். எனக்கும், எனது குடும்பத்துக்கும் நீதிமன்றம் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.�,”