சாத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேராசிரியை நிர்மலா தேவி இன்று (ஏப்ரல் 20) அழைத்துச் செல்லப்பட்டார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி கணிதத் துறை உதவி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்ததற்காக ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவியை ஏப்ரல் 28ஆம் தேதி வரை 12 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, மதுரை மத்தியச் சிறையில் நிர்மலா தேவி அடைக்கப்பட்டார். வழக்கு அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
பேராசிரியை விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம், நேற்று (ஏப்ரல் 19) விசாரணையைத் தொடங்கினார். பல்கலைக்கழக பதிவாளர், துணைவேந்தர் செல்லத்துரை ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இரண்டாவது நாளான இன்று அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
நிர்மலா தேவி விவகாரத்தில் 7 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவுசெய்தனர். போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் முத்து சங்கரலிங்கம் தலைமையில் இந்தக் குழு நேற்று அமைக்கப்பட்டது.
போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, நிர்மலா தேவியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. எனவே, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவியை போலீஸார் பாதுகாப்புடன் சாத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். வழக்கு தொடர்பான நபர்கள் தவிர வேறு யாரையும் போலீஸார் உள்ளே அனுமதிக்கவில்லை.
�,