பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கில், நீதிமன்றத்தில் அவரை நாளை ஆஜர்படுத்த வேண்டும் எனக் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அதே கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முருகன், கருப்பசாமி ஆகியோருக்குக் கடந்த மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் பல முறை மனு தாக்கல் செய்தார் நிர்மலா தேவி. ஆனால், அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிர்மலா தேவி மனு தாக்கல் செய்திருந்தார். முந்தைய விசாரணையின்போது, ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் உள்ள நிர்மலா தேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது என்ற கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். அதற்கு, எந்தவித ஆட்சேபனையும் இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.
இன்று (மார்ச் 11) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக, இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, பேராசிரியை நிர்மலா தேவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர் நீதிபதிகள். நிர்மலா தேவி தொடர்பான வழக்குகளும் ஜாமீன் வழக்கும் நாளை(மார்ச் 12) விசாரிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.�,