மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கர்நாடகாவைச் சேர்ந்தவர் எனத் தவறாக குறிப்பிட்டதால் கன்னடர்கள் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வருகிற மே 12ஆம் தேதி கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி நேற்று முன்தினம் (மே 3) கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “பாஜக எப்போதும் பெண்களுக்கு உரிய மதிப்பை அளிக்கும். எனது ஆட்சியில்கூட கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவரை (நிர்மலா சீதாராமன்) தான் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமித்து இருக்கிறேன். அதேபோல கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கையா நாயுடுவை பாஜக துணை குடியரசுத் தலைவராக்கி இருக்கிறேன்” என்று பேசினார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று பிரதமர் மோடி தவறாகக் கூறியதால், கன்னடர்கள் நேற்று (மே 4) சமூக வலைதளங்கள் முழுவதிலும் மோடியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கன்னடர்களின் சமூக வலைதளப் பக்கங்களில், “தமிழரான நிர்மலா சீதாராமன் ஆந்திராவைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அவர் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட்டபோது கன்னட அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி ஓட்டுக்காகப் பொய் சொல்லக் கூடாது” என்று பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக, பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் ‘நான் மனதால் கன்னடர்’ என்று கூறியதற்கு, ‘கன்னடர் என்று சொல்லிக் கொள்ளும் மோடி கர்நாடகா மீது ஏன் இந்தியைத் திணிக்கிறார்?’ என்று முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.�,