கீழமை நீதிமன்றத்தின் எல்லா விசாரணையிலும் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்கு தொடுத்துள்ள நிலையில், ராமநகரா 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இன்று முதல், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
கர்நாடகா மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது தான் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர் நித்யானந்தா மீது புகார் அளித்தார். 2010ஆம் ஆண்டு இது குறித்த புகார் எழுப்பப்பட்டது. இது குறித்துக் கர்நாடக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தியது. சிஐடி போலீசார் விசாரணையின்போது, தன்னை ஆண்மையற்றவர் என்று குறிப்பிட்டார் நித்யானந்தா. ஆனால் பாலியல் சோதனைக்கு உட்படுத்த முயன்றபோது, அதில் பங்கேற்க மறுத்தார். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அவரது சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
**பாலியல் சோதனை**
நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், 2014ஆம் ஆண்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, தனது உடல்நிலை 6 வயது சிறுவனுக்கு உரியது என்று அவரது சார்பில் வலியுறுத்தப்பட்டது. சோதனையின் முடிவில், அவர் ஆண்மை உள்ளவர் என்றும், எந்தவிதப் பாலியல் நோய்க்கும் ஆளாகாதவர் என்றும் உறுதி செய்யப்பட்டது.
இதன் பிறகு, தன் மீதான வழக்குகளை ரத்து செய்யுமாறு நித்யானந்தாவின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தையும் நாடியது நித்யானந்தா தரப்பு. இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த ஜூன் மாதம் ராமநகரா நீதிமன்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உடனடியாக விசாரணை நடத்தி இந்த வழக்கை முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ராமநகரா 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கியது.
இந்தியச் சட்டப் பிரிவு 376, 377, 420, 114, 201, 120பியின் படி, நித்தியானந்தா மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தா தவிர, சிவா வல்லபனேனி என்ற நித்ய சச்சிதானந்தா, தனசேகரன் என்ற நித்ய சதானந்தா, ராகினி என்ற மா நித்ய சச்சிதானந்தா, ஜமுனா ராணி என்ற மா நித்தியானந்தா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கோபால் ரெட்டி என்பவர் தற்போது வரை தலைமறைவாக இருந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
**வாரண்ட் பிறப்பிப்பு**
கடந்த ஜூன் மாதம் முதல் நடந்துவரும் இந்த வழக்கு விசாரணையில், இதுவரை ஒரு முறை கூட நித்யானந்தா நேரில் ஆஜராகவில்லை. இது தொடர்பாக, அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தார் நீதிபதி கோபாலகிருஷ்ண ராய். இரண்டு முறை ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், வடமாநிலங்களில் ஆன்மிகச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால் விசாரணையில் ஆஜராக முடியவில்லை என்று நித்யானந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதை ஏற்க மறுத்துவிட்டார் நீதிபதி.
இந்த வழக்கு விசாரணை, இன்று (நவம்பர் 22) மீண்டும் ராமநகரா நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளிடம் இன்று முதல் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**விலக்கு கேட்கும் நித்யானந்தா**
ராமநகரா 3வது குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுக்கு எதிராக, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசாரணையின்போதும் ஆஜராவதில் இருந்து நித்யானந்தா மற்றும் நித்ய சச்சிதானந்தா ஆகியோருக்கு இம்மனுவில் விலக்கு கோரப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர், வழக்கின் எல்லா விசாரணை நாட்களிலும் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே வகையில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி வருகிறது நித்யானந்தா தரப்பு.
**மொழிபெயர்ப்பாளருக்கு எதிர்ப்பு**
அதேபோல, ராமநகரா நீதிமன்ற வழக்கில் முக்கிய புகார்தாரரான லெனின் கருப்பனுக்கு மொழிபெயர்ப்பாளர் உதவி வழங்கப்படுவதற்கு நித்யானந்தா தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்ற வாதத்தை எழுப்பி வருகிறது. இது குறித்த முடிவு, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நேற்று முன்தினம் (நவம்பர் 20) நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது, கர்நாடக சிஐடி போலீசார் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞரான சேத்தன் சோட்டா ஆஜரானார். நித்யானந்தா எல்லா வழக்கு விசாரணையிலும் ஆஜராக வேண்டுமென்று சிஐடி தரப்பில் வாதாடினார். இந்த வழக்கு விசாரணையானது நாளை (நவம்பர் 23) பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
**கஞ்சா சர்ச்சை**
கஞ்சா ஒரு மூலிகையே தவிர போதைப் பொருள் அல்ல என்று நித்யானந்தா பேசிய வீடியோ பதிவொன்று, சில நாட்களுக்கு முன்னதாகச் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. “மதுதான் போதைப்பொருள். கஞ்சா என்பது ஒருபோதும் போதைப்பொருள் ஆகாது; அது ஒரு மூலிகை. கஞ்சாவுக்கு அடிமையானதாக எனது வாழ்க்கையில் ஒருவரையும் இதுவரை கண்டதில்லை. நான் அதனைப் பயன்படுத்தியதில்லை. உங்கள் அனைவரையும் அதனைப் பயன்படுத்துமாறும் கட்டாயப்படுத்தவில்லை.
கஞ்சா உபயோகிப்பவர்களால் தங்களது செயல்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிவதைப் பார்த்திருக்கிறேன். கஞ்சா பயன்படுத்துபவர்களால், நினைத்த மாத்திரத்தில் அந்த பழக்கத்தைக் கைவிட முடியும். ஆனால் கஞ்சாவினால் உங்களது சுதந்திரம் கட்டுண்டு இருக்காது; உடல்நலம் பாதிக்கப்படாது. ஆனால் அதனை நான் விளம்பரப்படுத்தவில்லை” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார் நித்யானந்தா. இது குறித்து கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் தகவல் வெளியானது. பார்வையாளர்கள் சிலர் நித்யானந்தாவின் பேச்சு ஒளிபரப்பப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தை நாடினர்.
**நித்யானந்தாவுக்கு நோட்டீஸ்**
இதையடுத்து, இது குறித்துப் பதிலளிக்குமாறு அவருக்கு மத்திய குற்றப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்த சம்மன் குறித்து விளக்கமளிக்காமல் அவர் தவிர்த்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள். இது பற்றி திநியூஸ்மினிட் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
“சதுர்மாத விரதத்தையொட்டி, அவர் கர்நாடக மாநிலத்துக்கு வெளியே பயணம் மேற்கொண்டு வருவதாகச் சொல்கின்றனர். பிடதி ஆசிரமத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் அவரைப்பிடிக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர் பிடதி காவல் நிலைய போலீசார்.
**சட்ட மீறல்**
கடந்த ஆகஸ்ட் மாதம், கர்நாடகாவைச் சேர்ந்த ராப் பாடகர் சந்தன் ஷெட்டி கஞ்சாவைப் பற்றி ஒரு பாடல் வெளியிட்டிருந்தார். அவர் பிரபலமானவர் என்றும், தடை செய்யப்பட்ட கஞ்சாவைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இதனால் அதிகமாக வாய்ப்புள்ளது என்றும் கூறி மத்திய குற்றப்பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பியது. போதைப்பொருட்கள் மற்றும் மனநலக் கேடுகளை விளைவிக்கும் மருந்துகள் தடுப்புச் சட்டத்தை மீறுவதாக இது அமைந்துள்ளது என்று தெரிவித்தது. இதற்காக வருத்தம் தெரிவிக்குமாறு சந்தன் ஷெட்டியை கேட்டுக்கொண்டது.
இதற்கு மாறாக, நித்யானந்தா விவகாரத்தில் அவரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளது மத்திய குற்றப்பிரிவு.
�,”