‘பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஒரு சிறந்த நடிகர்’ என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கிண்டல் செய்யும்விதமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பீஹார் தலைநகர், பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘பீஹார் மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் நிதிஷ்குமார் தடுப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். மாநிலத்தில் கொலை, கொள்ளை அதிகரித்ததுடன் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், அடுத்த மக்களவைத் தேர்தலில் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக ஜனதா கட்சிகள் தெரிவித்துள்ளன. முதலில் பீஹாரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர் முயற்சிக்கட்டும். பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என நிதிஷ் கூறிவருகிறார். சுமார் 17 ஆண்டுகளாக பாஜக-வுடனும், ஆர்எஸ்எஸ் அமைப்புடனும் கூட்டணி வைத்திருந்தபோது இந்த ஞானோதயம் அவருக்கு வரவில்லையா?
நிதிஷின் இத்தகைய தேர்ந்த நடிப்பை அனைவரும் பாராட்ட வேண்டும். பீஹாரில் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ள நிதிஷ், இதற்கு முன்னர் பல ஆண்டுகாலமாக தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறக்க வழிவகுத்தவர் என்பதை மறக்கக்கூடாது’ என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.�,