ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் 18 மாநிலங்கள் கடுமையான நிதிப் பற்றாக்குறையில் இருந்தது தெரியவந்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 23.1 சதவிகித அளவை இந்தியாவின் 18 மாநிலங்கள் எட்டியுள்ளன. இதனால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் நிதிப் பற்றாக்குறை இலக்கில் 36.1 சதவிகிதம் அளவு எட்டப்பட்டுள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் மிக மோசமான அளவாகும். ஜூலை – செப்டம்பரில் இம்மாநிலங்கள் 12.6 சதவிகிதம் கூடுதலான அளவில் செலவு செய்துள்ளன. அதேபோல, இதற்கு முந்தைய ஏப்ரல் – ஜூன் காலாண்டில் செய்த செலவை விட 15 சதவிகிதம் கூடுதலாகச் செலவு செய்துள்ளன. இந்த விவரங்களைப் பொதுக் கணக்காய்வாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
மாநிலங்களின் மூலதனச் செலவுகள் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளன. வரி வருவாயைப் பொறுத்தவரையில், ஏப்ரல் – செப்டம்பர் அரையாண்டில் இம்மாநிலங்களின் வரி வருவாய் முந்தைய ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிவடைந்துள்ளது. ஜிஎஸ்டி வாயிலான வருவாய் 7.7 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில்கூட சராசரியாக 16.7 சதவிகித வருவாய் வளர்ச்சி இருந்தது. 2011-12ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் வரி வருவாய் மிக மோசமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. செலவுகள் அதிகரித்து வருவாய் குறைந்துள்ளதால் இந்நிதியாண்டின் எஞ்சிய மாதங்களில் மாநிலங்கள் தங்களது செலவுகளைக் குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவற்றின் பங்களிப்பு குறையும் சூழல் உருவாகும் என்று மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது.�,