B
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு நிதி நிறுவனங்கள்மீது 50 சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மத்திய அரசால் நீக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 19 நிதி நிறுவனங்களின் மீது 50 சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளில் ஏதும் சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகப் புகார்கள் வந்தனவா என்று மத்திய அமைச்சர் ஹான்ஸ்ராஜ் அகிரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹான்ஸ்ராஜ் அகிர் பதிலளிக்கையில், “டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சைபர் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. பி.ஓ.எஸ். கருவிகள், மைக்ரோ ஏ.டி.எம்கள், மின்னணு வால்லெட்டுகள், ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள், ஸ்மார்ட்போன்கள், யூ.பி.ஐ பயன்பாடு, ரூபே, ஆதார் மூலம் கட்டணம் செலுத்தும் அமைப்புகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கணினி அவசர உதவி அணியால் 21 ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது” என்று அவர் பதிலளித்தார்.
�,