நாலடி இன்பம் – 10: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு!

Published On:

| By Balaji

இலக்குவனார் திருவள்ளுவன்

**ஆட்பார்த் துழலு மருளில்கூற் றுண்மையால்

தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய்ம்மின் – பீள் பிதுக்கிப்

பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன்

கள்ளங் கடைப்பிடித்த னன்று**.

பொருள்: தான் கொண்டு போகவேண்டிய உயிரைத் தேடித் தேடி அலைந்து கொண்டுபோகும் அருளற்றவன் யமன். கருவில் இருந்தாலும் அல்லது பிறந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அழ அக்குழந்தையின் உயிரை எடுத்துச் செல்லும் இரக்கம் அற்றவன் அவன். அவன் வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு, வழிப்பயணத்தில் உதவும் கட்டுச்சோறு போன்ற உதவும் அறத்தை இளமையிலேயே செய்யுங்கள்.

சொல் விளக்கம்: ஆள் = தான் உயிரைப்பிரித்துக் கொண்டு போகவேண்டிய ஆளை; பார்த்து = தேடிப் பார்த்து; உழலும் = அதே வேலையாகத் திரியும்; அருள் = பரிவு; இல் = இல்லாத; கூற்று = யமன்;

உண்மையால் = இருக்கின்றான் ஆதலால், தோள் கோப்பு = தோளில் சுமந்து செல்லும் கட்டுச்சோறு (ஆகிய அறத்தை), இளமையில் = இளமைப்பருவத்தில்; கொண்டு = தேடிக்கொண்டு, உய்ம்மின் = பிழையுங்கள்; பீள் = முதிரா கருப்பத்தை; பிதுக்கி = பிதுங்கச்செய்து; தாய் = தாயானவள்; அலற = அழ; பிள்ளையை = குழந்தையை; கோடலால் = கொள்ளுதலால்; அதன் = அவ் யமனது; கள்ளம் = வஞ்சத்தை; கடைப்பிடித்தல் = உறுதியாய் அறிந்துகொள்ளுதல்; நன்று = நல்லது.

கூற்றங்கொண் டோடத் தமியே

கொடுநெறிக்கட் செல்லும் போழ்தி

னாற்றுணாக் கொள்ளீர்

என்னும் பாடலில் சீவக சிந்தாமணி (பாடல் 1550) அறச்செயல்களைக் கூற்றுவன் கொண்டு செல்லும் பாதைக்கான பொதி சோறு (ஆற்றுணா) என்கிறது.

‘அவன்தான் மனிதன்’ திரைப்படத்தில் கண்ணதாசனின் பாடல் ஒன்று இவ்வாறு தொடங்கும்.

மனிதன் நினைப்பதுண்டு… வாழ்வு நிலைக்குமென்று…

இறைவன் நினைப்பதுண்டு… பாவம் மனிதனென்று…

அவ்வாறு இறைவன் எண்ணுவதை அல்லது அவன் சார்பில் யமன் எண்ணுவதை மனிதன் நினைத்துப் பார்க்காததால்தான் வாழ்வை நிலையெனத் தவறாக நம்புகின்றனர்.

யமனை நடுநிலையான அறவரசன் என்பார்கள். அதை இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது. யமன் கருத்துடன் இருக்கிறான் என்பதற்கு,‘ஆட் பார்த்து’ என்றும் அதை மட்டுமே வேலையாகக் கொண்டு அலைகிறான் என்பதற்கு ‘உழலும்’ என்றும் கடமையில் கண்ணோட்டம் பாரான் என்பதற்கு ‘அருள்இல்’ என்றும் கூறப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share