நாராயணசாமி-கிரண்பேடி: பேச்சுவார்த்தை துவங்கியது!

Published On:

| By Balaji

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் முதல்வர் நாராயணசாமியுடன், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியிலிருந்து வெளியேற வேண்டும் என்பன உள்பட 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 13ஆம் தேதி முதல் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை எதிரில் தொடர் போராட்டத்தை நடத்திவருகிறார். இதற்கிடையே டெல்லியிலிருந்து நேற்று சென்னை திரும்பிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் திட்டமிட்டபடி நேற்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

புதுச்சேரிக்கு இன்று வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், நாராயணசாமிக்கு தனது ஆதரவை நேரில் தெரிவித்துக் கொண்டார். அங்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய கேஜ்ரிவால், “ஆளுநர் கிரண்பேடி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் போட்டியிட்டு மோசமான தோல்வியை எங்களிடம் அடைந்தவர்.தேர்தலில் தோல்வியடைந்தவர் ராஜ்நிவாஸில் ஆளுநராக அமர்ந்து ஆட்சி புரிகிறார். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தர்ணாவில் உள்ளனர். ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடான விஷயம். கிரண்பேடி மக்களுக்கு வேலை செய்யவில்லை. மோடிக்காக வேலை செய்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆளுநர் கிரண் பேடி இடையே இன்று மாலை 5 மணி வாக்கில் பேச்சுவார்த்தை துவங்கியது. பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் அஷ்வினிகுமார் மற்றும் அனைத்துத் துறை செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். இதன் முடிவில் நாராயணசாமி போராட்டத்தை வாபஸ் பெறுவாரா அல்லது தொடர்ந்து போராட்டம் நடைபெறுமா என்பது தெரியவரும்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share