`நாயகிகளின் படங்களில் ஆஜரான அனிருத்

Published On:

| By Balaji

சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் படங்களுக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்கள் பணியாற்றிவந்தாலும் அனிருத் தற்போது படக்குழுவுடன் இணைந்துள்ளார்.

இளம் தலைமுறை இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலமாக பெரும் இளைஞர் கூட்டத்தை தனது ரசிகர்களாகக் கொண்டுள்ளார். தனது படங்களின் பாடல்களுக்குக் குரல் கொடுப்பதைப் போல பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் பாடிவருகிறார். அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, டி.இமான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

சமந்தா நடிப்பில் செப்டம்பர் 13ஆம் தேதி இரு படங்கள் வெளிவரவுள்ளன. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள சீமராஜா, கன்னடத்தில் ஹிட்டான யூ டர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் என அந்த நாளில் அவருக்குப் போட்டியாக அவரது படமே இறங்குகிறது. இதில் யூ டர்ன் படத்திற்கு பூமா சந்திரா தேஜஸ்வி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் புரோமோ பாடலில் பாடுவதற்காக அனிருத் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத் தெலுங்கில் இசையமைத்த ‘அக்னியாதவசி’ படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் குரல் கொடுக்கும் போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளின் ரசிகர்களையும் கவரும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கனா படத்திலும் நாட்டுப்புறப் பாடல் ஒன்றை அனிருத் பாடியுள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இவர் மரகத நாணயம் படத்திற்கு இசையமைத்து பரவலாக கவனம் பெற்றார். நரம்பிசைக் கருவிகள், பியானோ ஆகியவற்றோடு தவில், நாதஸ்வரம் ஆகிய இசைக்கருவிகளும் இப்பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share