நான் கலைஞரின் பிள்ளை , சொன்னதை செய்வேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரைக் கட்சியில் சேர்க்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சம்மதிக்கவில்லை என்று கூறப்பட்டது. எனவே தனது பலத்தை நிரூபிப்பதாகக் கூறிவரும் அழகிரி, செப்டம்பர் 5ஆம் தேதி கலைஞரின் நினைவிடம் நோக்கி பேரணி செல்லவுள்ளதாகவும், ஒரு லட்சம் பேர் வரை அதில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். உண்மையான கட்சி தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்றும் கூறி வந்தார்.
இதற்கிடையே, திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். கலைஞரைத் தவிர யாரையும் தன் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அழகிரி முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, தன்னைக் கட்சியில் இணைத்துக்கொண்டால், ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் என்று குறிப்பிட்டார்.
தனது பலத்தை நிரூபிப்பேன் என்று சவால் விடுத்திருந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி முதல் மதுரையில் உள்ள தனது வீட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று (செப்டம்பர் 2) பத்தாவது நாளாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, “நான் கலைஞரின் பிள்ளை, சொன்னதை செய்வேன். சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார்.
ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியும் அழைப்பு ஏதும் வரவில்லையே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, பதிலளிக்க மறுத்துவிட்டுச் சென்றார்.�,