ஒரு சொல் கேளீரோ! – 17: அரவிந்தன்
ஒற்றெழுத்து (க், ச், த், ப்) என்பது மிகவும் சிக்கலானது. எங்கே ஒற்று வர வேண்டும், எங்கே வரக் கூடாது என்பதில் பலருக்கும் தீராத குழப்பம் உள்ளது. தமிழில் நல்ல புலமை பெற்றவர்களே சறுக்கி விழும் இடம் இது. இதற்குத் தெளிவான, விரிவான விதிகள் உள்ளன. அவற்றை விளக்க முனைந்தால் இது இலக்கணப் பாடமாகிவிடும். எனவே, பொதுவான சில வழிகாட்டுதல்களை மட்டும் இங்கே தருகிறோம்.
அன்றாடம் நாம் எழுதும் தமிழைப் பிழையின்றி எழுத உதவுவதே இந்தப் பத்தியின் நோக்கம். நுட்பமான இலக்கண விதிகளைச் சொல்லி, பொது வாசகரை ஆயாசப்படுத்தக் கூடாது என்பது இந்தப் பத்திக்கான வரையறைகளில் ஒன்று. எனவே இங்கே குறிப்பிடப்படும் ‘ஒற்று விதிகள்’ பொது வாசகருக்கான மொழியிலேயே தரப்படுகின்றன.
அதாவது, இரண்டாம் வேற்றுமைத் தொகை, உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்பன போன்ற இலக்கண விளக்கங்கள் இங்கே இருக்காது. எது சரி, எது தவறு என்பது குறிப்பிடப்படும். கூடியவரையிலும் நேரடியாக எளிமையாகச் சொல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
பத்திரிகை உலக நண்பர் ஒருவர் கட்டுரை ஒன்றை அனுப்பிவிட்டு, “க், ச் போட்டு அனுப்புங்க” என்பார். ஒற்று என்றுகூடச் சொல்ல மாட்டார். அந்த அளவுக்கு எளிமையாக, நேரடியாகச் சொல்ல வேண்டும் என்னும் நோக்கத்துடன் இங்கே ஒற்றுச் சிக்கல் கையாளப்படுகிறது.
இனி ‘ஒற்று’க்குப் போகலாம்.
பின்வரும் சொற்களுக்குப் பிறகு கட்டாயமாக ஒற்று மிகும். அதாவது ஒற்றெழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.
அந்த, இந்த, எந்த, அதை, இதை, எதை, அவனை, அவளை, அவர்களை, அப்படி, இப்படி, எப்படி, அதற்கு, இதற்கு, எதற்கு, அவளுக்கு, அவனுக்கு, அவர்களுக்கு…
எடுத்துக்காட்டு:
அதைக் கூறு
இதைக் காட்டு
எதைப் பற்றி
அவனைப் பார்
அவளைக் கூப்பிடு
அவர்களைத் தவிர்க்கலாம்
அப்படிக் கூறினார்
இப்படிப் பேசக் கூடாது
எப்படிப் பார்த்தாலும் தவறுதான்
அதற்குப்போய் அலட்டிக்கொள்ளலாமா
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
எதற்குச் சொல்கிறாய்
அவளுக்குத் தெரியுமா
அவனுக்குக் கிடைக்குமா
அவர்களுக்குச் சொல்லிவிடு
**ஒற்று மிகாத இடங்கள்**
ஒற்று மிகாத என்றால் ஒற்றெழுத்து வராத என்று எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.
தந்த, வந்த, கிடைத்த, கொழுத்த, பருத்த, தேர்ந்தெடுத்த, கருத்த, வெளுத்த, தந்த, தராத, பார்த்த, பார்க்காத ஆகிய சொற்களுக்குப் பின் ஒற்று மிகாது.
தந்தபோது, வந்தபோது, கிடைத்த பிறகு, பருத்த கோழி, கொழுத்த பன்றி, தேர்ந்தெடுத்த கடை
நல்ல, கெட்ட, அழகிய ஆகிய சொற்களுக்குப் பிறகும் ஒற்று மிகாது.
நல்ல பெட்டி, கெட்ட பழம், அழகிய கண்ணாடி
முக்கியமான, அவசரமான என்பன போன்ற சொற்களுக்குப் பிறகும் ஒற்று மிகாது.
‘ஆன’ என்று முடியும் சொற்களுக்குப் பிறகு ஒற்று மிகாது. ஆனால் ‘ஆக’ என்று முடியும் சொற்களுக்குப் பிறகு ஒற்று மிகும்.
எடுத்துக்காட்டு:
முக்கியமான புத்தகம்
அவசரமான காரியம்
தவறான கருத்து
முக்கியமாகச் சொன்னார்
அவசரமாகக் கடந்தார்
தவறாகக் குறிப்பிட்டார்
முக்கிய என்னும் சொல்லுக்குப் பின் வல்லின எழுத்து வந்தால் ஒற்று மிகும்.
முக்கியக் காரணம், முக்கியப் பாடம்…
முக்கியமான என்று எழுதினால் ஒற்று போடக் கூடாது.
**பெயர்ச் சொற்கள் இணைதல்**
இரண்டு பெயர்ச் சொற்கள் இணையும்போது ஒற்று மிகும்.
சங்கத் தமிழ்
மாநகரக் காவல்
சென்னைக் குடிநீர்
ஆகாயத் தாமரை
கலைச் சொற்கள்
பாடப் புத்தகம்
கடைத்தெரு
கடைக்குட்டி
புலிக்குட்டி
ஆட்டுக்குட்டி
கன்றுக்குட்டி
கடலோரக் கவிதைகள்
மாற்றுத் திறனாளி
குற்றப் பத்திரிகை
செய்தித் தொகுப்பு
(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று)
[பிடுங்கி எறிய வேண்டிய புள்ளிகள்!](https://minnambalam.com/k/2019/06/05/7)
**
மேலும் படிக்க
**
**
[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)
**
**
[பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!](https://minnambalam.com/k/2019/06/09/40)
**
**
[ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!](https://minnambalam.com/k/2019/06/09/22)
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”