நாதுராம் கோட்ஸே: கொலையாளியா, பயங்கரவாதியா, தேசபக்தரா?

public

ராஜன் குறை

பொதுவாக அரசியல் காரணங்களுக்காக செய்யப்படும் கொலைகளைப் பற்றி ஒரு குழப்பம் நிலவுகிறது. ஏற்கனவே மின்னம்பலத்தில் ஒரு கட்டுரையில் எழுதியபடி அரசியலுக்கும், போருக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். அரசர்கள் போர் புரிந்தார்கள். நவீன காலத்தில் அரசியலில் மாற்று கருத்து உள்ளவர்களுடன் போர் புரிகிறோம். அரசர்கள் போரில் கொன்றார்கள். எனவே மாற்றுக் கருத்துள்ள எதிரிகளை கொல்லலாம் என்ற தவறான எண்ணம் நிலவுகிறது.

நாதுராம் கோட்ஸே தனிப்பட்ட காரணங்களுக்காக காந்தியை கொல்லவில்லை. அவருடன் எந்த தனிப்பட்ட விரோதமும் அவருக்குக் கிடையாது. இந்திய தேசம் எப்படி உருவாக வேண்டும், அதன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று கோட்ஸேவிற்கு ஒரு கருத்து அல்லது இலட்சியம் இருந்தது. காந்தியின் கருத்தியலும், இலட்சியங்களும் அதற்கு மாறாக இருந்தன. எனவே தேசத்தின் நன்மை கருதி அவர் காந்தியை கொன்றார். அதனால் அவரும் ஒரு வகையில் தேசபக்தர்தான் என்ற எண்ணம் பலரது மனதிலும் இருப்பதாகத் தெரிகிறது. சாத்வி பிரக்யா போல இதை பகிரங்கமாகச் சொல்லி கண்டிக்கப்படாவிட்டாலும், உரையாடலில் பலரும் இதை கூறுவார்கள். இந்துத்துவ சிந்தனையாளர்கள் பலருக்கு, ஆர்.எஸ்.எஸ், பாஜக உறுப்பினர்களுக்கு இந்த எண்ணம் உண்டு என்பதை நான் கள ஆய்வில், நேர் பேச்சில் அறிந்திருக்கிறேன். ஆனால் இன்று காந்தியை பகிரங்கமாக எதிர்ப்பது பாஜக-விற்கு அரசியல் ரீதியாக சாத்தியம் இல்லை. அதுதான் சாத்வி பிரக்யாவின் பிரச்சினை.

கமல்ஹாசனோ தேர்தல் பிரச்சாரத்தில் கோட்ஸே சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, இந்து என்று கூறி அதுவும் சர்ச்சைக்கு உள்ளானது. கோட்ஸேவை பயங்கரவாதி என்று சொல்லக்கூடாது என்றும், கமல்ஹாசன் இஸ்லாமிய ஓட்டுக்களை கவர இவ்வாறு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசுகிறார் என்றும் பாஜகவினர் சொன்னார்கள்.

கோட்ஸே தனிப்பட்ட காரணங்களுக்காக கொல்லாததால் கொலையாளியும் இல்லை, இலட்சியத்துடன் செய்ததால் பயங்கரவாதியும் இல்லை, தேசத்தந்தை காந்தியை கொன்றதால் தேசபக்தரும் இல்லை என்றால் அவர் செய்த கொலையை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி எழுகிறது. இதை கோட்பாட்டுரீதியாக புரிந்துகொள்வதும் நிலைப்பாடு எடுப்பதும் மிகவும் முக்கியம்.

**கோட்ஸே எதற்காக நினைவு கொள்ளப்படுகிறார்?**

கோட்ஸே போன்ற கருத்தியல் உள்ளவர்கள் எத்தனையோ பேர் அவர் இயக்கத்தில் இருந்தார்கள். அவர்களையெல்லாம் குறித்து நாம் விவாதிப்பதில்லை. எனவே நாதுராம் கோட்ஸே என்ற பெயரை நாம் அறிவதும், விவாதிப்பதும் அவர் காந்தியை சுட்டுக் கொன்றார் என்ற காரணத்தினால்தான். அவர் தனிப்பட்ட காரணங்களால் கொல்லவில்லை, அவர் மனநிலை பிறழ்ந்தவர் இல்லை, மதவெறியர் இல்லை, முழுக்க தெளிவாக கருத்தியல் வேறுபாட்டின் காரணமாக, காந்தி உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும் அவர் இந்தியாவின் தேசிய உருவாக்கத்தை அவரது கருத்தியலால் பாழ்படுத்துவார் என்ற காரணத்திற்காகவேதான் கொன்றார்.

நாகரீக உலகில், நவீன அரசியலில் கருத்தியல் மோதல்கள் இயல்பு, அவரவர் அவர்களது கருத்தியலை பிரசாரம் செய்யலாம். தீவிரமாகவும் பிரச்சாரம் செய்யலாம். ஒருவரது கருத்துநிலையே மிகவும் தீவிரமானதாக இருந்தால் அது தீவிரவாத நிலைப்பாடு என்று கருதப்படும். ஆனால் தீவிரமான கருத்திற்காக கொலை செய்ய துவங்கினால் அவர்கள் பயங்கரவாதிகள் என்றுதான் அறியப்பட வேண்டும். சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள் சிலசமயங்களில் வன்முறையான எதிர்ப்பை தவிர்க்கமுடியாததாக்குவார்கள். ஆனால் எல்லா அதிகாரங்களையுமே வன்முறையால் எதிர்ப்பது சரியல்ல.

இதில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஒரு குழப்பம் இருந்தது. அவர்கள் செடிஷன் என்ற தேச விரோத குற்றத்தை சுமத்தும்போது கருத்தியல் ரீதியாக தீவிர எண்ணம்கொண்டவர்களையும் பயங்கரவாதிகள், டெர்ரரிஸ்ட் என்று சொன்னார்கள். அதை நாம் ஏற்கவில்லை. ஆனால் கொலைசெயல் புரிபவர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதில் தவறில்லை. ஏனெனில் அவர்கள் கொலைகள் மூலம் அச்சுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள் எனலாம்.

இதில் என்ன குழப்பம் என்றால், அவ்வாறு கொலை செய்பவர்கள் தாங்கள் அநீதியை எதிர்த்து இலட்சியத்திற்காக கொல்வதாகச் சொல்வார்கள். தாங்கள் நடத்துவது யுத்தம், போர் என்பார்கள். மாவோயிஸ்ட்டுகள் மக்கள் யுத்தம், பீப்பிள்ஸ் வார் என்று ஒரு அமைப்பை வைத்திருந்தார்கள். அவர்களும் இலட்சியத்திற்காகத்தான் போராடுகிறார்கள் என்றால், பாஜக அவர்களை தேசபக்தர்கள் என்று ஏற்பார்களா? அவர்களுக்கும் தேசம் பற்றிய ஒரு கருத்தியல் இருக்கிறது. அதற்காகத்தான் ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அப்போது அவர்கள் தியாகத்திற்கும் பத்ம விருதுகள் கொடுக்கலாமா? அப்படியே ஒவ்வொருவரும் தங்கள் கருத்தியலுக்காக மாற்றுக் கருத்துள்ளவர்களை கொன்றால் அது சரியாகுமா?

** போராளிகளை எப்படிப் பார்ப்பது? **

இப்போது வாஞ்சி நாதன், பகத் சிங் உள்ளிட்ட பல ஆங்கிலேயர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட, கொலை செய்யத் துணிந்த போராளிகளை எப்படிப் பார்ப்பது? அவர்களும் இலட்சியவாதிகள்தான். அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் அப்படி செய்தார்கள் என்று கொள்வோம். இதில் வாஞ்சிநாதன் சனாதன மனோபாவம் கொண்டவராகத் தெரிகிறார். பகத் சிங் புரட்சிகர மனப்போக்குள்ளவர். இறை மறுப்பு மானுடவாதி. சோஷலிஸ எண்ணம் கொண்டவர். கருத்தியல்கள் வேறுபட்டாலும் அவர்கள் செயல்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் பிரச்சினைகளுக்கு கொலை ஒரு தீர்வல்ல. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோர் வன்முறையை, பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை, ஊக்குவிக்கவில்லை. அவர்கள் கருத்தியல் பிரச்சாரத்தையே அரசியல் பாதையாக கருதினார்கள். அதற்கு அதிக முயற்சியும், காலமும் தேவை என்றாலும், மக்களை கருத்தியல் ரீதியாக மனமாற்றம் கொள்ளச்செய்வதே உண்மையான விடுதலை என்று கருதினார்கள். பகத் சிங்கை இன்று நாம் கொண்டாடுவது அவர் வெளிப்படுத்திய கருத்தியல் சிந்தனைகளுக்காகத்தானே தவிர, அவர் செய்த கொலைக்காகவோ, வீசிய குண்டிற்காகவோ இல்லை.

ராஜீவ் காந்தியை “நாங்கள்தான்”, அதாவது தமிழர்கள்தான்” கொன்றோம் என்று சீமான் முழங்கி வருகிறார். ஏனெனில் ராஜீவ் காந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தாராம். அதனால் அவரைக் கொல்வது சரியாம். வன்முறைக்கு எதிரான வன்முறையும் அகிம்சைதான் என்றெல்லாம் அபத்தமாகவும், விபரீதமாகவும் நச்சுக் கருத்துக்களை விதைத்து வருகிறார் சீமான். அவர் ஒரு பேச்சில் சாத்வி பிராக்யா கோட்ஸே தேசபக்தர் என்று சொன்னதை சுட்டிக்காட்டுகிறார். அதாவது ஒரு கொலையை நியாயப்படுத்தினால், எத்தனை கொலையையும் நியாயப்படுத்தலாம் என்று ஏற்பட்டுவிடுகிறது. இது ஒரு விபரீதமான போக்கு என்றுதான் கூறமுடியும். இருபத்தோராம் நூற்றாண்டிலும் அரசியல் கொலைகளை ஆதரிப்பதும், அதை ஒரு தீர்வாகச் சொல்வதும் முதிர்ச்சியற்றதும், தீமை பயப்பதும் ஆகும். சீமான் சட்டப்படியே குற்றம் செய்கிறார் என்றுதான் நினைக்கிறேன். அவர் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

**கொலை செய்வது வீரமா? **

போரில் தன் உயிரையும் பணயம் வைத்து எதிரியுடன் நேருக்குநேர் போரிட்டு கொல்வதில், மரணத்தை ஏற்கத்துணிவதில் வீரம் இருக்கிறது. ஆனால் நிராயுதபாணிகளை அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கிக் கொல்வது கோழைத்தனம். அது மனித வெடிகுண்டாக இருந்தாலும் சரி, அதற்குப்பின் தற்கொலை செய்துகொண்டாலும் சரி. கொல்லப்படுபவருக்கு தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு வாய்ப்பையே தராமல் கொல்வது ஒருபோதும் வீரம் அல்ல. அதனால்தான் வாலியை ராமர் மறைந்திருந்து கொன்றதே அவர் வீரத்திற்கு இழுக்கு, அநீதி என்றுதான் சொல்கிறோம். மகாபாரதத்திலும் இதுபோன்ற அறம் பிறழ்ந்த வேலைகள் பலவற்றை தர்மரின் தரப்பிலும் செய்கிறார்கள். அதெல்லாம் காலம் காலமாக தர்மத்தை வலியுறுத்தவே விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தன் மனைவியுடன் ரயிலில் சென்றுகொண்டிருந்த கலெக்டர் ஆஷ் என்பவரை திடீரென்று அவர் எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதில் என்ன வீரம் இருக்கிறது என்று நாம் கேட்க வேண்டும். வாஞ்சி அதன்பிறகு தன்னையும் மாய்த்துக்கொண்டதால் அந்த கொலை வீரச்செயலல்ல. வீரவாஞ்சி என்று அவரை அழைப்பது தவறு. தன்னை கொல்லக்கூடிய அளவு சமபலம் உள்ளவருடன் போரிட்டு அவரை மாய்த்தால் அது வீரம். ஆனால் பயங்கரவாதச் செயல்களை செய்பவர்கள் பெரும்பாலும் திடீர் தாக்குதல் நடத்தி, நிராயுதபாணிகளை தங்களை தற்காத்துக்கொள்ள வாய்ப்பே தராமல் கொல்கிறார்கள். இது அரசியல் அல்ல என்பது மட்டுமல்ல; வீரமோ, தர்மமோ கிடையாது. உன் கருத்தியலுக்காக நீ கொல்லப்படலாம் என்று அச்சுறுத்தும் பயங்கரவாதம் என்றுதான் நாம் கருத வேண்டும்.

**கட்டப்பாவும், பாகுபலியும்**

பாகுபலி படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் இடையில் முக்கிய கேள்வியாக “கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்?” என்பதாகவே இருந்தது. அதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கம் அரசியல் தத்துவம் சார்ந்தது. கட்டப்பா அரச கட்டளைக்கு கட்டுப்பட்ட வீரன். பாகுபலி அவன் நேசிக்கும் இளவரசன். ஆனால் பட்டத்து அரசியே இளவரசனை கொல்லும்படி கட்டளையிடுகிறாள். அதனால்தான் பாகுபலியை அவன் கொன்றான் என்பது விளக்கம். ஆனால் கட்டப்பா எப்படி பாகுபலியை கொன்றான் என்பதில்தான் பிரச்சினை இருக்கிறது. அவன் பாகுபலியை முதுகில் குத்திக் கொல்கிறான்.

இந்த படம் வீரத்தையும், கடமை உணர்ச்சியையும் கேவலப்படுத்தியது. அரசி இளவரசனை கொல்லச்சொன்னால் அவனை போரிட்டுதான் கொல்ல வேண்டும். நாலைந்து பேராக சுற்றிவளைத்துக் கூட போரிடலாம். ஆனால் எதிர்நின்று போரிட்டுதான் கொல்ல வேண்டுமே தவிர, முதுகில் குத்துவது கோழைத்தனம், அதர்மம். அரச தர்மம் என்பது இப்படி அதர்மமாக செயல்படுவதல்ல. அவரென்ன அரசியா, கொள்ளைக் கூட்டத் தலைவியா? முதுகில் குத்தச்சொல்ல?

ஆனால் அந்த படத்தை விமர்சித்த பலரும் இப்படிப்பட்ட மோசமான கற்பனை, அறப்பிறழ்வு இருப்பதை பொருட்படுத்தவேயில்லை. கொல்வது என்று வந்துவிட்டால் எப்படி கொன்றால் என்ன என்று நினைக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் எல்லாவிதமான அரசியல் கொலைகளையும் தர்மமாகப் பார்க்கும் மனநிலையும் உருவாகிறது.

சாத்வி பிராக்யாவும், சீமானும் எப்படி சாத்தியமாகிறார்கள் என்பதற்கு கட்டப்பாவே விளக்கம். மக்கள் மனதில் அரசியல் என்றாலே அதர்மம்தான் என்ற அளவு கோட்பாட்டுச் சீரழிவு ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. காந்தியை கொலை செய்ததால் மட்டும் கோட்ஸே பயங்கரவாதியல்ல. கோட்ஸே அணியினரின் அரசியல் சித்தாந்தமே வன்முறையை அங்கீகரிக்கும் அரசுமையவாத சிந்தனையாகத்தான் இருந்தது. ஹிட்லரின் இனவாதத்தையும் பாராட்டியவர்கள் அவர்களிடையே இருந்தார்கள். இத்தகைய கொலைகார மனோபாவத்தில் அரசியலும் இல்லை, வீரமும் இல்லை என்றுதான் காந்தியர்களும், பெரியாரியர்களும், அம்பேத்காரியர்களும் உறுதிபட கூறவேண்டும். ஆம் காந்தியுடன் தீவிரமாக முரண்பட்டவர்கள்தான் அம்பேத்கரும், பெரியாரும். ஆனால் கருத்தியல் போரே அரசியல், கொலைகள் அல்ல என்பதை உணர்ந்த பேரறிஞர்கள். காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றவர்களின் தீர்க்கதரிசனம் மிக்க அரசியலால் பண்பட்ட மண்ணில் கொலையையும், வன்முறையையும் ஒரு வழிமுறையாக நினைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *