லுய்ஸ் இரிகாரே – ஜூலியா க்றிஸ்தவா
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம். வங்காள சினிமாவில் பணியாற்றிய தமிழ் நண்பன் என்னிடம் கேட்டான், சினிமா பற்றி இவ்வளவு எழுதும் நீங்கள் ஏன் சினிமா எடுக்கக் கூடாது என்று. ”நான் சினிமா எடுத்தால் அந்த சினிமா தடை செய்யப்படும். நான் கைது செய்யப்படலாம்” என்றேன். அப்படி என்ன படம் என்றான் நண்பன். நான் சொன்ன பதிலுக்கு முன்னால் அதன் நீண்ட பின்னணியைப் பற்றி சுருக்கமாக விளக்க வேண்டும். ஐரோப்பியக் கலாச்சாரத்தின் தாக்கம் என் எழுத்தில் உண்டு என்று வசதிக்காகத்தான் சொல்கிறேன். அதாவது, எந்தெந்த எழுத்தாளர், எந்தெந்த இயக்குனரின் பாதிப்பு என் எழுத்தில் இருக்கிறது என்பதையெல்லாம் பிரித்தறிய முடியாது. 1978-இலிருந்து 1990 வரை நான் தில்லியில் இருந்த போது பார்த்த ஐரோப்பிய சினிமா, படித்த ஃப்ரெஞ்ச் நூல்கள் ஆகியவை என் அறிதல் முறையை (perception) மாற்றின. அவ்வளவுதானே தவிர, இன்னாரின் பாதிப்பு என்னிடம் இருந்தது என்று சொல்ல முடியாது. உதாரணமாக, இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஸீரோ டிகிரியை எழுதிய போது எனக்கு lipogrammatic என்ற வார்த்தையே தெரியாது. லிப்போக்ரமாட்டிக் என்பது குறிப்பிட்ட எழுத்து அல்லது சொல்லைப் பயன்படுத்தாமலே எழுதும் முறை. ஸீரோ டிகிரியில் இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. என்ன வார்த்தைகள் என்று கடைசியில் சொல்கிறேன். அவந்திகாவின் கதை என்ற அத்தியாயத்தில் மட்டுமே அந்த இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுவும் ஏனென்றால், அந்த அத்தியாயம் எந்த இலக்கிய அறிவும் இல்லாத அவந்திகா என்ற கதாபாத்திரத்தால் எழுதப்பட்டதாக நாவலில் வருகிறது. மற்ற அத்தியாயங்களெல்லாம் சூரியா என்ற இலக்கியவாதியால் தொகுக்கப்பட்டவை. அதனால்தான் அந்த அத்தியாயத்தில் மட்டும் அந்த இரண்டு வார்த்தைகளைத் தடை செய்யவில்லை.
சரி, லிப்போக்ரமாட்டிக் என்றால் தெரியாது. அப்படியிருக்க ’அந்த’ இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தாது ஏன்? இதற்கும் நான் ஃப்ரான்ஸ் பக்கம் போக வேண்டும். அப்போது நான் ஃப்ரெஞ்ச் பெண்ணியத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். குறிப்பாக, ஹெலன் சிஸ்யு (Hélène Cixous), சிஸ்யு, லுய்ஸ் இரிகாரே (Luce Irigraray), ஜூலியா க்றிஸ்தவா (Julia Kristeva) ஆகிய மூவர். புனைகதை என்று எடுத்துக் கொண்டால், கேத்தி ஆக்கர் (Kathy Acker). இவர் அமெரிக்கர். மேற்கண்ட மூன்று ஃப்ரெஞ்ச் பெண்ணியவாதிகளைப் போல் இவர் கோட்பாட்டாளர் அல்ல. உலகில் மிக முக்கியமான transgressive எழுத்தாளரான இவரைப் பற்றி அதிகம் எழுதியிருக்கிறேன். என்னுடைய ஸீரோ டிகிரியின் ஆங்கில மொழிபெயர்ப்பை இவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
இவர்களைத் தவிர மற்றொருவர் ஜெர்மன் க்ரேர் (Germaine Greer) என்ற ஆஸ்திரேலியப் பெண்ணியவாதி. இவரது Madwoman’s Underclothes என்ற நூல் 30 ஆண்டுகளுக்கு முன் எனக்குப் புனித நூல் போன்றே இருந்தது. அந்த நூல் இல்லாமல் என்னை அப்போது பார்க்கவே இயலாது. பாண்டிச்சேரியில் நடந்த பெண்ணியக் கருத்தரங்கின் போது என்னையும் பேச அழைத்தார்கள். நான் கையிலிருந்த ‘பைத்தியக்காரியின் உள்ளாடைகள்’ நூலிலிருந்து சில பத்திகளைப் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில்தான் என்றாலும் கிட்டத்தட்ட ரகளையே ஆகி விட்டது. வழக்கம் போல் என்னைப் பாதுகாப்பாக வெளியே அழைத்துக் கொண்டு போனார்கள்.
மேலே குறிப்பிட்ட பெண்ணியவாதிகள் என்ன சொன்னார்கள்?
”பெண்கள் தடைகளை உடைத்துக் கொண்டு சூன்யக்காரிகளைப் போல் புறப்பட்டு விட்டார்கள். அவர்களின் தேகம் காமத்தால் கொழுந்து விட்டு எரிகிறது. அவர்களின் மணம், சுவை எல்லாமே வேட்கையின் வெம்மையைக் கொண்டிருக்கிறது. அவர்களின் காமம் வெறி மிகுந்ததாக இருக்கிறது; Transgressive-ஆக இருக்கிறது; வெளிப்படையாக இருக்கிறது; உயிரை மாய்த்து விடுவதாக இருக்கிறது; இன்னமும் ஆண்கள் இதிலிருந்து மீளவில்லை. பெண்களின் காமம் பூகம்பத்தைப் போலவும் எரிமலையைப் போலவும் ஆழிப் பேரலை போலவும் பயங்கரமாக இருக்கிறது. இப்படியெல்லாம் பதற்றத்தையும் பீதியையும் உண்டாக்கி விட்டதால்தான் பெண்களின் காமத்தைப் புதிராக மாற்றி விட்டார்கள்.” என்கிறார் சேவியர் காத்தியே என்ற பெண்ணியவாதி.
பெண்களின் இந்த ட்ரான்ஸ்கிரஸெவ் காமம் இதுவரை எழுதப்படவே இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்தினார் சிஸ்யு. இதுவரை எழுதப்பட்டவையெல்லாம் ஆண்களின் பார்வைதானே தவிர பெண்ணே உணர்ந்த காமம் அல்ல. பெண்ணின் காமம் முடிவில்லாதது; பிரபஞ்ச ரீதியானது; இடையறாமல் பாய்ந்து (flux) கொண்டிருக்கக் கூடியது; நுணுக்கமானது; சூட்சுமமானது. ஆணின் காமத்தை விடப் பெருந்தூரம் செல்லக் கூடியது என்றார் சிஸ்யு. பெண்ணின் தேகம் முழுதுமே காமத்தின் ஊற்றுக் கண்களாக இருக்கின்றன. ”பெண்ணின் பாலுறுப்புகள் அவள் தேகம் முழுவதுமே பரவி இருக்கின்றன. அதனால் எல்லா இடத்திலும் அவள் இன்பத்தை அனுபவிக்கிறாள்” என்கிறார் இரிகாரே. The whole of my body is sexuate. My sexuality is not restricted to my sex and to the sexual act (in the narrow sense).” இது இரிகாரே. இதில் ஆண் பாதி, பெண் பாதி என்ற இந்திய அர்த்தநாரி தத்துவம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. பெண்ணின் காமத்துக்கு முன்னால் ஆண் காமம் எதுவுமே இல்லை என்கிறார்கள் இந்தப் பெண்ணியவாதிகள்.
என் எழுத்துக்கள் ஏன் ஆபாசமாக இருக்கின்றன?
கலையைப் போலவே போர்னோகிராஃபியும் வேட்கையையே சுற்றி வருகிறது. வேட்கைக்கு முடிவு இல்லை. Jouissance – j என்ற ஃப்ரெஞ்ச் எழுத்து தமிழில் ழ என்று எழுதப்படுகிறது. Jean Genet-ஐ இங்கே ஃப்ரெஞ்ச் அறிந்தவர்களே ழான் ஜெனே என்று எழுதுகிறார்கள். இது மிகவும் தவறு. je என்பதன் உச்சரிப்பைத் தமிழில் எழுதவே முடியாது. ஜ, ஷ என்ற இரண்டு உச்சரிப்புகளின் சேர்க்கையே je. ’ஐ லவ் யூ’ என்பதை உலக மொழிகளிலேயே ஃப்ரெஞ்சில் தான் அதியற்புதமாகச் சொல்ல முடியும் என்பார்கள். Je t’aime. அதன் உச்சரிப்பு கீழே:
[How to Pronounce Je T’aime](https://www.youtube.com/watch?v=9dNFK9FibjE)
துரதிர்ஷ்டவசமாக ஐ லவ் யூ என்பதற்குத் தமிழில் சரியான வாக்கியம் இல்லை. ’நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்பதெல்லாம் இப்போது வரும் அபத்தக் களஞ்சிய மொழிபெயர்ப்புகளைப் போன்றது. Je t’aime என்பதைத் தமிழில் கிட்டத்தட்ட ஜுத்தேம் என்றுதான் எழுதலாமே தவிர ழுத்தேம் என்று எழுதக் கூடாது. அதைப் போலவேதான் ஜான் ஜெனே. ழான் ஜெனே அல்ல. ஜான் பால் சார்த்ர். ழான் பால் சார்த்ர் அல்ல. அதன்படி jouissance என்பதை ஜுவிஸான்ஸ் என்று சொல்லலாம். ஜுவிஸான்ஸ் என்றால் பரவசம். பரவச உணர்வு என்பது கலாச்சாரத்தையும் மொழியையும் தாண்டியே செயல்படுகிறது. இந்தக் காரணத்தினால்தான் என் எழுத்தில் தெரியும் காமப்பரவசச் சொல்லாடல்கள் கலாச்சாரத்தையும் மொழியையும் தாண்டாத பலருக்கு ஆபாசமாகத் தெரிகிறது.
ஃபோர்க்கிஸுக்கும் அவன் சகோதரி ஸெட்டோவுக்கும் பிறந்த மூன்று சகோதரிகளில் மூத்தவள் மெதூஸா. கிரேக்க புராணங்களில் வரும் தேவதை. ஆரம்பத்தில் அவள் பேரழகியாக இருந்தாள். அவளை பொஸைடன் (Poseidon) என்பவன் வன்கலவி செய்து விட்டதால் நீதி தேவதையான ஏத்தனா, மெதூஸா எந்த ஆணைப் பார்த்தாலும் அவன் கல்லாகி விடுவான் என்ற வரத்தைக் கொடுத்து விடுகிறது. அது மட்டும் அல்லாமல், மெதூஸாவின் உருவத்தையும் அகோரமாக மாற்றி விடுகிறது ஏத்தனா நீதிதேவதை. தலையில் முடிக்குப் பதிலாக சர்ப்பங்கள் நெளிந்தன. இந்த மெதூஸாவை The Laugh of Medusa என்ற தனது நூலில் காமதேவதையாக மாற்றி எழுதினார் ஹெலன் சிஸ்யு. இதில் பெண் பற்றிய இந்தியப் புரிதலையே மாற்றி அமைக்கிறார் சிஸ்யு. பெண்ணுக்கு ஆணுறுப்பு (Phallus) இல்லை. ”இந்த இல்லாமை ஆணின் இருப்போடு இணைந்தால் சிருஷ்டி முழுமை அடைகிறது” என்பதுதான் இந்தியத் தத்துவம். ஆனால் ஆண் இல்லாமலேயே காமப் பரவசத்தை நாங்கள் அடைய முடியும் என்று ’மெதூஸாவின் சிரிப்பு’ நூலில் அறிவிக்கிறார் சிஸ்யு. இதன் பொருட்டு பெண் தன்னுடைய தேகத்தை ஆணின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். எப்படி? பெண் தன்னுடைய தேகத்தையே எழுத வேண்டும். அவளுடைய தேகம்தான் எழுதுகோலின் மசி.
“Write! Writing is for you, you are for you; your body is yours, take it.”
”Woman will return to the body that has been more than confiscated from her.”
இதெல்லாம் சிஸ்யு. மெதூஸாவின் சிரிப்பைப் புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் ஃப்ராய்டுக்குப் போக வேண்டும். ஃப்ராய்ட் பெண்ணின் காமத்தை கருந்துளையோடு ஒப்பிடுகிறார். அந்தத் துளையில் ஆண் குறி காணாமல் போய் விடுகிறது என்கிறார். ஆக, பெண் என்பவள் பயமுறுத்தக் கூடிய துர்தேவதை என்று அர்த்தமாகிறது. அதாவது, மெதூஸா. பார்த்த மாத்திரத்தில் ஆண் கல்லாகி விடுவான்.
இங்கே குறுக்கே பாய்கிறார் சிஸ்யு. மிஸ்டர் ஃப்ராய்ட், அச்சப்படாதீர்கள். கல்லாக ஆக மாட்டீர்கள். தைரியமாக மெதூஸாவைப் பாருங்கள். பார்த்தால் அவள் உங்களைப் பார்த்துப் புன்னகைப்பது தெரியும்.
இதுதான் சிஸ்யு. இதுதான் மெதூஸாவின் சிரிப்பு.
கரவாஜியோ தீட்டிய மெதூஸாவின் ஓவியம்
பெண்கள் தங்கள் தேகத்தின் பரவசப் புள்ளிகளைக் கண்டறிய வேண்டும் என்கிறார் சிஸ்யு. மனித வரலாற்றில் இதுவரையிலான எழுத்து அத்தனையுமே லிங்க மையவாதத்தின் (Phallocentric) அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. இதை நாம் மாற்றியாக வேண்டும். இதற்கான வழி l’ecriture feminine. அதாவது, பெண் எழுத்து. இதன்படி ஆண் x பெண் என்ற எதிர்வு நிலை தகர்க்கப்படுகிறது. ஆண்டாண்டுக் காலமாக இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யோனி தன் கதையை எழுத ஆரம்பிக்கிறது.
ஒருகாலத்தில் யோனிக்கு chastity belt போட்டிருந்தது மேற்கத்திய சமூகம்.
இந்தக் கற்புக் கவசங்கள் பற்றிப் பல நகைச்சுவைக் கதைகள் உள்ளன. அரசன் தன் மனைவிக்கு சேஸ்டிடி பெல்ட் அணிவித்து விட்டுப் போருக்குப் போய் விட்டான். கடைசியில் பார்த்தால் அவள் தன் பணியாட்களோடு உறவாடிக் கொண்டிருந்தாள். இதைத் தன் ஒற்றன் மூலம் அறிந்த அரசனுக்குப் பெரும் குழப்பம். பூட்டு என்று இருந்தால் திருட்டுச் சாவியும் இருக்கும் என்பது பாவம், அந்த அரசனுக்குத் தெரியவில்லை.
இது காஸிம் என்ற ஓவியனின் கதை. மனைவி மீது நம்பிக்கை இல்லாத அவன் அவளது யோனியில் ஆட்டுக்குட்டியை வரைந்து விட்டு ஊருக்குப் போனான். வேறு யாரிடமாவது போனால் ஓவியம் அழிந்து விடும் அல்லவா? அவளோ அது பற்றியெல்லாம் கவலையே படாமல் பக்கத்து விட்டுக்காரனோடு ஜல்ஸா பண்ணிக் கொண்டிருந்தாள். ஆறு மாதத்தில் வருகிறேன் என்று சொல்லிச் சென்ற காஸிம் திடீரென்று மூன்றே மாதத்தில் வருகிறேன் என்று ஓலை அனுப்பினான். பார்த்தாள் மனைவி. காதலனிடம் ஆட்டுக்குட்டியை அந்த இடத்தில் வரையச் சொன்னாள். அவனும் வரைந்தான். வீடு திரும்பிய காஸிம் முதல் வேலையாக அந்த இடத்தைப் பார்த்தான். பயங்கர அதிர்ச்சி. ஆட்டுக்கு எப்படி தாடி முளைத்தது? அவன் வரைந்தது ஆட்டுக் குட்டி. இதுவோ தாடி முளைத்த முதிர்ந்த ஆடு. அவள் சொன்னாள். பயப்படாதே காஸிம். மூன்று மாதத்தில் ஆட்டுக் குட்டி வளராதா?
சரி, இதற்கும் ஸீரோ டிகிரியின் லிப்போக்ரமாட்டிக் எழுத்துக்கும் என்ன சம்பந்தம்?
இந்தக் கட்டுரையை மேலிருந்து மீண்டும் படியுங்கள். ஒரு, ஒன்று, ஓர் என்ற வார்த்தைகள் இதில் இடம் பெற்றிருக்காது. ஸீரோ டிகிரியிலும் அப்படியே. இது ஏன்?
அந்த நாட்டு ராஜாவுக்கு சிருஷ்டி பற்றிய சந்தேகம். அதற்குமேல் அந்த சந்தேகம் பற்றி அவன் எதுவும் சொல்வதாக இல்லை. சந்தேகத்தைத் தீர்ப்பவனே அதையும் புரிந்து கொண்டு பதில் சொல்ல வேண்டும். தவறாக பதில் சொன்னால் தலை போய் விடும். சரியாகச் சொன்னால் பாதி ராஜ்ஜியம். மந்திரிதான் தகுந்த நபர்களைக் கொண்டு வர வேண்டும். பல பேரின் தலை உருண்டது. நீ என்னை டபாய்க்கிறாய், நாளை நீ நல்ல அறிவாளியாகக் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நீதான் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லி விட்டான் ராஜா. எப்படியும் நாளை தலை போய் விடும். அதற்கு முன் ராஜாவை நன்றாக அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த மந்திரி வயக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கோவணம் கட்டிய பொடியனைக் கொண்டு போய் ராஜாவின் முன்னே நிறுத்தினான். ராஜா வாயைத் திறக்காமல் என்ன என்பது போல் சைகை செய்தான். பொடியன் தன் ஆள் காட்டி விரலைக் காட்டினான். ராஜா காற்றில் வட்டமாக பூஜ்யத்தைப் போல் வரைந்தான். பொடியன் கோவணத்தை அவிழ்த்துக் காட்டினான். குதூகலம் அடைந்த ராஜா இடையனுக்குப் பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து விட்டான்.
மந்திரிக்கு எதுவுமே புரியவில்லை. இடையனிடம் சென்று என்னப்பா விஷயம் என்று கேட்டான். ராஜா எத்தனை ஆடு தருவாய் என்றார். சரி, ராஜாவே கேட்கிறாரே என்று ஆள்காட்டி விரலைக் காட்டினேன். அவரோ பேராசை பிடித்தவராய் விரலை வட்டமாய் வரைந்து எல்லா ஆட்டையும் கேட்டார். எனக்குக் கடுப்பு வந்து விட்டது. போய்யா, ங்கொய்யாலே என்று கோவணத்தை அவிழ்த்துக் காட்டினேன். அவ்வளவுதான் தெரியும் எனக்கு என்று சொன்னான்.
மந்திரிக்குக் குழப்பம் அதிகமானது. நேராக ராஜாவிடம் போனார்…
(கடைசி வரை லிப்போக்ரமாட்டிக்காகவே எழுதி விட்டேன். ஆஹா!)
தொடரும்…
**ஹெலன் சிஸ்யுவின் இளவயதுத் தோற்றம்.**
**ஹெலன் சிஸ்யு – இன்று**
கட்டுரையாளர் குறிப்பு: [சாரு நிவேதிதா](https://www.facebook.com/charu.nivedita.9)
புகைப்படம்:[பிரபு காளிதாஸ்](https://www.facebook.com/prabhu.kalidas)
தமிழைவிட மலையாள இலக்கிய உலகில் பிரசித்தமான சாரு நிவேதிதா, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆங்கில இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கிறார். தமிழ்க் கலாச்சாரத்தை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்யவேண்டியது இப்போதைய அவசரமான தேவை என்று கருதும் சாரு, ஏஷியன் ஏஜ் ஆங்கில தினசரியில் மூன்று ஆண்டுகள் எழுதிய பின்னர் இப்போது, லண்டனிலிருந்து வெளிவரும்Art Review Asia என்ற பத்திரிகையில் Notes From Madras என்ற தொடரை எழுதி வருகிறார். தமிழில் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களும் பல கட்டுரை தொகுதிகளும் எழுதியிருக்கிறார்
�,”