பாகிஸ்தான் ராணுவ தளபதியைக் கட்டிப்பிடித்த நவ்ஜோத் சிங் சித்துக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், அவருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பிரதமராக தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பதவியேற்றார். இந்த விழாவில் கலந்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித், பாகிஸ்தான் ராணுவ தளபதி குமர் ஜாவத் பாஜ்வாவை கட்டிப்பிடித்த வீடியோ காட்சி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதவிர, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி மசூத் கான் பக்கத்தில் நவ்ஜோத் அமர்ந்திருந்ததும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்தச் சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நவ்ஜோத் மீது தேச துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நவ்ஜோத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 21) தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதற்காக சித்துவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சமாதானத்தின் தூதுவர் அவர். பாகிஸ்தான் மக்களின் அற்புதமான அன்பையும் பாசத்தையும் சித்து பெற்றார். இந்தியாவில் அவரை இலக்கு வைத்துத் தாக்குபவர்கள், துணைக்கண்டத்தில் சமாதானத்திற்கு கெடுதியைச் செய்து வருகின்றனர். சமாதானம் இல்லாமல் நமது மக்கள் முன்னேற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.�,