^நவாஸ் ஷெரிஃபைக் கைதுசெய்ய உத்தரவு!

Published On:

| By Balaji

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீது கைது ஆணைப் பிறப்பித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, ‘பனாமா லீக்ஸ்’ செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி நவாஸ் ஷெரிஃபைப் பிரதமர் பதவியிலிருந்து [தகுதிநீக்கம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2017/07/28/1501247288) செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நவாஸ் ஷெரிஃப் குடும்பத்துக்குச் சொந்தமான ‘ஃபிளாக்‌ஷிப்’ நிதி நிறுவனம் வெளிநாடுகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் நவாஸ்மீது தேசியப் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷிர் சம்மன் இன்று குற்றப்பத்திரிகை பதிவுசெய்தார். இவ்வாறு தொடர்ந்து நவாஸ்மீது மூன்று ஊழல் வழக்குகள் அடுத்தடுத்து பதிவுசெய்யப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கும்படி நவாஸ் கோரிக்கை வைத்திருந்தார். லண்டனில் அவரது மனைவி மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் தன்னால் பாகிஸ்தானில் வழக்கு விசாரணையில் பங்கேற்பது கடினமாக உள்ளதென்றும் நவாஸ் விளக்கமளித்திருந்தார்.

இதையடுத்து, இஸ்லாமாபாத் நீதிமன்றம் நவாஸின் கோரிக்கையை நிராகரித்ததோடு அவருக்குக் கைது வாரன்ட் பிறப்பித்தும் உத்தரவு வெளியிட்டுள்ளது. தற்போது லண்டனில் இருக்கும் நவாஸ் பாகிஸ்தான் வந்திறங்கியதும் கைதுசெய்யப்படுவார் என்று நீதிபதி முகமது பஷீர் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன்னர் பெயில் வாங்கினால் கைது நடவடிக்கை ஏதும் இருக்காது என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share