நரசிம்மராவ் முதல் நரேந்திர மோடி வரை: வங்கிகள் திசைமாறிய வரலாறு!

Published On:

| By Balaji

வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன் பேட்டி தொடர்ச்சி.

**1991 ஆம் ஆண்டு அமலான புதிய பொருளாதாரக் கொள்கை வங்கிகள் விஷயத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?**

சோவியத் யூனியன் வீழ்ந்ததும், ’நாங்கள் மக்கள் நல அரசுகள் அல்ல. முதலாளித்துவ அரசுகள்தான் மக்கள் நலம் என்ற முகமூடியை அணிந்திருந்தோம். இப்போது அது தேவையில்லை’ என்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள் அந்த முகமூடியைக் கழற்றி வீசின. அதன் வெளிப்பாடுதான் 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியா புதிய தாராளமயமாக்கல் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியது.

அன்று வந்த நரசிம்ம ராவ் அரசாங்கம் முதல் இன்று இருக்கக் கூடிய நரேந்திர மோடி அரசாங்கம் வரை எல்லாருமே வங்கிகளை பொதுத் துறையில் இருந்து தனியாருக்கு விற்பதற்கான வேலைகளை முனைப்பாக செய்யத் தொடங்கினார்கள். நரசிம்ம ராவ் காலத்திலேயே பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான சட்டம் கொண்டுவந்தார்கள். புதிதாக தனியார் வங்கிகள் துவக்கப்பட்டன. தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளாக மாற்ற மாட்டோம் என்ற கொள்கை நிலைப்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டது.

வாஜ்பாய் அரசாங்கத்தின் போது வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கான சட்டம் முன்மொழியப்பட்டது. வங்கி ஊழியர்கள், அதிகாரிகளுடைய தீவிரமான போராட்டத்தின் காரணமாக அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஒருவேளை அது நடந்திருந்தால் 2008 ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடியின் போது இந்திய நாட்டுப் பொருளாதாரம் கடுமையான பாதிப்படைந்திருக்கும்.

இந்திரா காந்தி காலத்தில், பணக்காரர்களுக்கான வங்கி என்பதை மாற்றி மக்களுக்கான வங்கி என திசை திருப்பினார். ஆனால் 1991 அதன் பின் வந்த கிட்டத்தட்ட அனைத்து அரசுகளுமே மக்களுக்கான வங்கிகள் என்பதைப் பணக்காரர்களுக்கான வங்கிகள் என்று மீண்டும் பழைய நிலைக்கே இட்டுச் சென்றன.

**நாட்டில் தனியார் வங்கிகள் இப்போது நிறைய இருக்கின்றன. மக்களுக்கான சேவைகளும் அதில் நடக்கின்றன. பணக்காரர்களுக்கான வங்கிகள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?**

மேலோட்டமாக பார்ப்பதற்கு அப்படித் தெரியும். ஆனால் 91க்குப் பிறகு இந்திய வங்கிகளின் அடிப்படையையே மாற்றி அமைத்துவிட்டனர். நான் முன்பே குறிப்பிட்டது போல் ஒரு வங்கிக்கு முன்னுரிமைக் கடன் என்றொரு வகைப்பாடு உண்டு. அது பொதுத்துறை வங்கிகளில் 40% என்று வரையறுக்கப்பட்டது. அதாவது ஏழை, எளியவர்கள், கிராமப்புறத்தினர், விவசாயிகள், மாணவர்கள் ஆகியோருக்கு வங்கிகள் 40% கடனை வழங்க வேண்டும். இதையெல்லாம் இப்போது குறைக்கப் பார்க்கிறார்கள். கல்விக் கடன் வழங்குவதை வெகுவாக குறைக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு அவசர பணத் தேவைக்காக ஒரு லட்சம் ரூபாய் வரையில் ஆவணங்களின்றி நகையை வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். இப்போது விவசாயிகள் அல்லாதோர்க்கு அதைக் கொடுத்துவிட்டு விவசாயிகளுக்குக் கொடுத்ததாகப் பொய்க் கணக்கு எழுதுகிறார்கள். சென்னை மாநகரத்தில் இதுபோல விவசாயிகளுக்காக ஒரு லட்சம் வரை ஆவணங்களின்றி பலருக்கும் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. சென்னை நகரத்தில் யார் விவசாயம் செய்கிறார்கள்? காஞ்சிபுரம், திருவள்ளூர் என்றால் கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால் சென்னையிலேயே விவசாயிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் என்று கொடுப்பது பொய் கணக்குதானே…

அதேபோல தொழில் முனைவோர்க்கு எந்த பிணையும் இல்லாமல் 2 லட்ச ரூபாய் வரைக்கும் முத்ரா கடன் கொடுப்பதாக அரசு அறிவிக்கிறது. ஆனால் பல வங்கிகளில் அது கிடைப்பதில்லை. மூன்று லட்சம் ரூபாய் வரை விவசாயக் கடன் எந்த உத்தரவாதமும் இல்லாமல் கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்படுவதில்லை.

ஏழரை லட்ச ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் கேட்டால், அவர்களிடம் அந்த தொகைக்கு ஈடான அதாவது 100% செக்யூரிட்டி கேட்கிறார்கள் வங்கிகள். ஆனால் பத்தாயிரம் கோடி, பதினைந்தாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் பெருமுதலாளிகளிடம் இருந்து 15% மட்டுமே செக்யூரிட்டி வாங்குகின்றன வங்கிகள். இது ஒன்று போதாதா, இப்போதைய வங்கிகள் யாருக்காகச் செயல்படுகின்றன என்பதற்கு? அதனால் பெருமுதலாளிகளின் வாராக் கடனாக மாறுகிறது.

**பொதுத்துறை வங்கிகள் சரியாகச் செயல்படாததாலும், அவற்றைச் செம்மைப் படுத்தவுமே தனியார் மயமாக்கப்படுகிறது என்ற ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறதே?**

மிகவும் பொய்யான, அபத்தமான, ஆபத்தான வாதம். பொதுவாகவே நம் நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மீது ஒரு தவறான முத்திரை கடந்த இருபது ஆண்டுகளாகக் குத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கான அரசாங்கத்தின் சேவையைக் குறைத்து, பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக அரசும், பெருமுதலாளிகளும் இணைந்து மேற்கொள்ளும் பித்தலாட்ட பரப்புரை இது.

2014 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகால மோடி ஆட்சியில் வங்கிகள் 5 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டின. பெருமுதலாளிகளின் வாராக் கடன் பல லட்சம் கோடி ரூபாய் நிலுவையில் இருக்கும்போதே இவ்வளவு லாபம் ஈட்டின பொதுத்துறை வங்கிகள். ஆனால் மோடி அரசு என்ன செய்தது தெரியுமா? பெருமுதலாளிகளின் வாராக் கடனுக்காக இந்த லாபத்தில் 6 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாயை லாபத்திலிருந்து ஒதுக்கீடு செய்கிறது. எனவே நிகர கணக்கில், வங்கிகள் 75 ஆயிரம் கோடி நஷ்டம் என்று கணக்குக் காட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டன.

இவ்வளவையும் மீறி பொதுத்துறை வங்கிகள்தான் இன்று சாதாரண மக்களுக்கான வங்கிகளாக இருக்கின்றன. இன்னொரு பக்கம் பொதுத்துறை தன்மையைக் காப்பாற்ற வேண்டும். ஏனெனில் வங்கியில் இருக்கும் பணத்தில் 72% மக்களின் பணம்.

**(கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகளின் இன்றைய நிலை… பொதுமக்களுக்கு அதிகரிக்கும் வங்கிக் கட்டணங்கள் இவை பற்றிய கேள்விகளுக்கு திரு. கிருஷ்ணனின் பதில்கள் மாலை 7 மணி பதிப்பில்)**

**-ஆரா**

[இந்திய வங்கிகள்: நேற்றும், இன்றும்!](https://minnambalam.com/k/2019/07/19/27)

**

மேலும் படிக்க

**

**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share