?நம்மாழ்வார் யார் உடைமை?

Published On:

| By Balaji

நம்மாழ்வார் உருவாக்கிய வட்டக் கல்லைச் சதுரக் கல் ஆக்கலாமா?

நரேஷ்

“அரசு இயந்திரம்ங்கிறது சதுரக் கல்லு மாதிரினு ஐயா சொல்லுவாரு. மக்கள் இயக்கம் வட்டக் கல் மாதிரி. அந்த வட்டக் கல்லை ஒரு தடவ உருட்டுனா போதும், அது பாட்டுக்கு போயிட்டே இருக்கும். ஆனா இந்த அரசு இயந்திரம் இருக்கு பாத்தீங்களா, அந்த சதுரக் கல்லை ஒரு தடவ உருட்டுனா ஒரே ஒரு முறை உருண்டுட்டு அப்டியே படுத்துக்கும். அதை சதா உருட்டிக்கிட்டே இருக்கனும். அப்பதான் நகரும்.”

– ஏங்கல்ஸ் ராஜா, மருத்துவர்.

வானகம் ஒரு மக்கள் இயக்கம். நம்மாழ்வார் உருட்டிவிட்ட அந்த வட்டக் கல் இன்றும் பல லட்சக்கணக்கானோரை உள்ளிழுத்து உருண்டுகொண்டிருக்கிறது. அதை அரசுடைமை ஆக்கினால், அது சதுரக் கல்லாகி உருள முடியாமல் முடங்கிவிடும்.

**அது என்ன வானகம்?**

இயற்கை விவசாயத்தைப் பரப்புவதற்காகத் தான் செல்லும் இடங்களிலெல்லாம் ஒரு இயக்கத்தை உருட்டிவிடுவார் நம்மாழ்வார். அப்படி உருட்டிவிடப்பட்ட பல்வேறு அமைப்புகள் இன்றுவரை உருண்டுகொண்டிருக்கின்றன. அவர் கடைசியாக உருட்டி உருவாக்கிய நிலத்தின் பெயர் ‘வானகம்’.

இயற்கை விவசாயப் பயிற்சிக்காகவும், மரபை நோக்கி மக்கள் திரும்புவதற்குமான பட்டறையாகவும் வானகத்தை வடிவமைத்தார் நம்மாழ்வார். பல்லாயிரக்கணக்கானோரைப் பயிற்றுவித்துப் பயன் கொடுத்திருக்கிறது வானகம். இன்னமும் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

நவீன சந்தைப்படுத்தும் முறைகளை நிராகரித்தவர் நம்மாழ்வார். ஆனால், தற்போது ஆர்கானிக் மார்க்கெட்டின் பிராண்டாக நம்மாழ்வாரின் புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது. இது எந்த அளவு தவறானதோ அதே அளவு, இதுபோன்ற அமைப்புகளை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கருத்தும் தவறானது.

**வானகமும் நவீன ஆராய்ச்சி நிறுவனமும்**

ஏன் நம்மாழ்வாரின் அமைப்பை அரசுடைமை ஆக்குவது பற்றி இப்போது விவாதிக்க வேண்டியிருக்கிறது?

நம்மாழ்வாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “நம்மாழ்வார் தோற்றுவித்த அமைப்பை அரசுடைமை ஆக்க வேண்டும். வானகத்தை உலகத் தரம் வாய்ந்த நவீன ஆராய்ச்சி நிலையமாக மாற்ற வேண்டும்” என்றார்.

நவீனத்தை விடுத்து மரபுக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கிழவர் உயிருடன் இருக்கும்வரை போராடினார். அந்தக் கிழவரின் வழி நின்று இன்றுவரை இயங்குபவர்கள், நவீனத்தின் வழியே மரபைத் தேடுகிறார்கள். நவீனத்தை விடுத்து ஊர் திரும்புகிறார்கள்.

ஆராய்ச்சி நிலையங்கள் இதுவரை என்ன செய்தன என்பதை நாம் அறிவோம். பசுமை, இயற்கை சார்ந்த ஆராய்ச்சிகளின் நவீனத் தலைவரே தங்கள் கண்டுபிடிப்புகள் தோல்வி அடைந்துவிட்டன என்று அறிக்கை வெளியிடுகிறார். தீர்வு பாரம்பரிய விதைகளில் இருக்கிறது என்கிறார்.

பலரும் மரபை நோக்கித் திரும்பும்போது, நவீன வழிமுறைகளை நோக்கி நம்மாழ்வாரின் அமைப்பைத் திருப்பினால் அது வரலாற்றுப் பிழையாகிவிடும்.

**சுய அரசாங்கங்கள்தான்**

“அரசாங்கம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தால், இந்த நிலத்திற்கு வந்து பயிற்சி எடுத்துக்கொண்டு, இதுபோன்ற நிலங்களை மாநிலம் முழுவதும் நிறுவலாம். அவர் சொல்லிக்கொடுத்த தொழில்நுட்பங்களை ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு செல்லலாம். மக்களால் மக்களுக்காக இயங்குவது அரசாங்கம் என்றால் வானகம் போன்ற அமைப்புகள் சுய அரசாங்கங்கள்தான். அவை மக்கள் தொலைத்த பாரம்பரிய அறிவை மீட்டெடுத்து அவர்களுக்கே வழங்குகின்றன. அதை நீங்களும் செய்ய வேண்டுமென்றால், தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் அவர் உருவாக்கிய நிலங்கள் உடைமையற்றவை” என்றார் வானகத்தின் ஆசிரியர் குழுவின் உறுப்பினர் வெற்றி மாறன்.

அந்தக் கிழவர் உயிருடன் இருந்திருந்தால். அவர் இன்னேரம் வேறொரு நிலத்தை உருவாக்கியிருப்பார். அவர் இல்லை எனும்போது அவர் கொடுத்துவிட்டுப் போன செலவத்தைப் பாதுகாப்பது நமது கடமை. அது அந்தக் கிழவருக்குச் செய்யும் நன்றிக்கடன்.

நம்மாழ்வாரின் அமைப்பை நாட்டுடமை ஆக்குவது குறித்த பேச்சுக்கள், வருங்காலத்தில் இப்படிப்பட்ட மக்கள் அமைப்புகளையும் ‘பிராண்டுகள்’ ஆக்கிவிடும். வணிகமாக்கி விற்பனை செய்துவிடும். வானகத்தை மட்டுமல்ல, வானகம் போன்ற எந்த அமைப்பையும் அரசுடைமை ஆக்க முடியாது. தனியுடைமையும் ஆக்க முடியாது.

சொல்லப்போனால், அவை மனிதர்களின் உடைமையே அல்ல. ஏனெனில் நம்மாழ்வார் மனிதர்களைத் தாண்டிச் சிந்தித்தவர். அவர் ஒவ்வொரு உயிருக்காகவும் உரையாடியவர். அவர் மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் உடைமையானவர்.

எனவே, நம்மாழ்வார் பொதுவுடைமை..! இதில் அரசுக்கோ தனியாருக்கோ உடமை என்னும் பேச்சுக்கே இடமில்லை.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel