தமிழக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு சட்ட உதவி வழங்க இயலாது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக, பன்னீர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில், ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘ரகசிய வாக்கெடுப்பு’ வேண்டும் என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தது தவறான ஒன்று. எனவே, ஜனநாயக நடைமுறைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டுமெனவும், மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பு வழியாக நடத்த உத்தரவிட வேண்டுமெனவும் ‘ குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 5ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,நீதிபதி தீபக் மிஸ்ரா,’ ரகசிய வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு எந்த அளவுக்கு உரிமையுள்ளது. இதில் அவரது அதிகாரம் என்ன ? என்பது குறித்து சட்ட உதவி வழங்குவதற்காக, ஜூலை 11ஆம் தேதி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு வேணுகோபால் அளித்துள்ள பதிலில்,’ நான் ஏற்கனவே பன்னீர்செல்வம் அணிக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறேன். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு தன்னால் சட்ட உதவி வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே உச்சநீதிமன்றம், மூத்த வழக்கறிஞர்களிடம் சட்ட உதவி கோருவதும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும், வழக்கமான ஒன்றுதான். எனவே வரும் ஜூலை 11ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அதற்குள் வேறொரு மூத்த வழக்கறிஞரின் சட்ட உதவியை கோர உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.�,