கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார் என்று எதிர்க்கட்சி தலைவரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா இன்று (ஜூலை 13) தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். தங்களது ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் ரமேஷ் குமார் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கிடையே சபாநாயகர் சார்பில், ராஜினாமா கடிதங்கள் குறித்த உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். இதன் மீது அவசர அவசரமாக முடிவெடுக்க முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
இம்மனுவை நேற்று (ஜூலை 12) விசாரித்த உச்ச நீதிமன்றம், ”கர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா மற்றும் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் எந்த நடவடிக்கையும் தற்போதைக்கு எடுக்கக் கூடாது” என்று உத்தரவிட்டிருந்தது.
ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் குமாரசாமி, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் தனது அரசு வெற்றி பெறும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நேரம் ஒதுக்கும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ள எடியூரப்பா, ”நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. வாக்கெடுப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். வாக்கெடுப்பு நடத்தினால் அது பாஜகவுக்குத்தான் பயனளிக்கும், இதற்காகத் திங்கள் கிழமை வரை காத்திருப்போம். கூட்டணி அரசைக் காப்பாற்றுவதில் முதல்வர் வெற்றிபெறமாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ராஜினாமா கடிதம் கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள 10 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்தச்சூழலில் இன்று (ஜூலை 14) உச்ச நீதிமன்றத்தில் சுதாகர், ரோஷன் பெய்க், எம்.டி.பி.நாகராஜ், முனிரத்னா மற்றும் ஆனந்த் சிங் ஆகிய மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை விரைவில் பரிசீலிக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளனர். எம்.டி.பி.நாகராஜ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் சித்தராமையாவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவொருபுறமிருக்க, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் இன்று ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”