நம்பிக்கையில்லாத் தீர்மானம்: இலங்கை அதிபர் நிராகரிப்பு!

Published On:

| By Balaji

இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (நவம்பர் 14) ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிபர் சிறிசேனா தெரிவித்துவிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் 122 பேர் கையெழுத்திட்டிருந்தனர். பின் குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘ராஜபக்‌ஷே அரசுக்கு பெரும்பான்மை இல்லை’ என்று முறைப்படி அறிவித்த சபாநாயகர் இதுகுறித்த தகவல்களை முறைப்படி அதிபருக்கு அனுப்பினார்.

ஆனால் நேற்று நள்ளிரவு சபாநாயகர் கரு ஜெயர்சூர்யாவுக்கு அதிபர் சிறிசேனாவிடம் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் இலங்கை அரசியல் குழப்பத்தைக் கடுமையாக்கியிருக்கிறது.

அதிபர் அனுப்பிய அந்தக் கடிதத்தில், “ராஜபக்‌ஷேவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுகையில் உரிய நாடாளுமன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

அதிபர்தான் இந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை பிரதமராக நியமனம் செய்கிறார். அவர் மீது நாடாளுமன்றத்தின் நம்பிக்கை பெறுவதற்கு முன் அதிபரின் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மேலும் அதிபரின் நியமனம் நாடாளுமன்றத்தால் கேள்விகேட்கப்படவோ, பரீட்சித்துப் பார்க்கவோ முடியாதது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், இப்போது நாடாளுமன்றத்தில் பிரதமர் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவையும் எழவில்லை. சபாநாயகர் அனுப்பிய கடிதத்தில் இருக்கும் ஆவணங்களில் உரிய கையெழுத்து இல்லை. அதனால் நாடாளுமன்ற மரபுகளுக்கும், நெறிமுறைகளுக்கும் மாறாக நடந்த இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நான் நிராகரிக்கிறேன்” என்று சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிபர் சிறிசேனா குறிப்பிட்டிருக்கிறார்.

அக்டோபர் 26 க்கு முந்திய அரசை அமைப்போம் என்று ரனில் உறுதியாக சொல்லியிருந்த நிலையில் நேற்று நள்ளிரவே அதிபர் சிறிசேனா இந்தக் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியிருக்கிறார். இதன் மூலம் ராஜபக்‌ஷேவே பிரதமராக நீடிக்கிறார் என்பதையே குறிப்பிட்டுள்ளார் அதிபர்.

இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில், ரனில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆளுங்கட்சி ஆசனங்களில் அமருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ராஜபக்‌ஷே இன்று காலை நாடாளுமன்றத்தில் பிரதமர் என்ற வகையில் பிரத்யேகமான ஓர் உரையை ஆற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் பதற்றமும் அதிகரித்திருக்கிறது.

மேலும் திட்டமிட்டப்படி இன்று பிற்பகல் அதிபருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் மிகப்பெரும் மக்கள் போராட்டமும் கொழும்பில் நடைபெற இருக்கிறது.

**அங்கேயும் சர்க்கார் செங்கோல் பிரச்சினை!**

இதனிடையே அதிபர் சிறிசேனாவின் கடிதத்தில் இருக்கும் சாராம்சத்தையே வேறு வகையில் வெளிப்படுத்தியுள்ளார் சுசில் பிரேமஜயந்தா என்ற ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.

அவர், “நாடாளுமன்றம் கூடும்போது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பறைசாற்றுவதாகக் கருதப்படும் செங்கோல் உரிய ஆசனத்தில் வைக்கப்பட வேண்டும். அப்படி வைக்கப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றம் செயல்படுவதாக அர்த்தம். ஆனால் நேற்று (நவம்பர் 14) நாடாளுமன்றம் கூடுகையில் ஏற்பட்ட பரபரப்பின் காரணமாக செங்கோல் உரிய முறையில் அதன் ஆசனத்தில் வைக்கப்படவில்லை. எனவே நேற்று கூடிய நாடாளுமன்றம் செல்லாது” என்று கூறியிருக்கிறார் அவர்.

செங்கோல் மூலம் சர்காருக்கு பிரச்சினை என்பது இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share