நமக்கு நாமே கேள்வி கேட்போம்! – காம்கேர் கே.புவனேஸ்வரி

Published On:

| By Balaji

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? – 22

படிப்பு, வேலை இரண்டுமே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை என்னும் புத்தகத்தின் அதி முக்கியமான அத்தியாயங்கள். இரண்டையும் ஸ்கிப் செய்துவிட்டு ஒருவரால் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. இந்த இரண்டும் இல்லாமல் ஒரு சாதாரண அடிப்படை வசதிகளுடன்கூட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாது.

படிப்பாகட்டும், வேலையாகட்டும் அது நம் திறமை மற்றும் ஆர்வத்துக்குத் தீனிபோடுவதாக அமைந்துவிட்டால் வாழ்க்கை இனிது. வாழ்தல் சுகம்.

ஆனால், திறமையும் ஆர்வமும் இரு வேறு துருவங்கள். ஆர்வம் இருக்கும் எல்லாத் துறையிலும் ஒருவருக்குத் திறமை இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.

திறமையும் ஆர்வமும் ஒருசேர அமையப்பெறும் ஒருவரால் மற்றவர்களைவிட படிப்பிலும், வேலையிலும் சிறப்பாகச் செயல்படமுடியும்.

ஒரு செயலைச் செய்வது என்பது வேறு. ‘சிறப்பாகச் செய்வது’ என்பது வேறு.

கிடைத்ததைப் படித்து கிடைத்த ஏதோ ஒரு வேலையில் அமர்வது எல்லோரும் செய்கின்ற செயல். இதில் நல்ல சம்பளம் கிடைக்கலாம். ரிஸ்க் இல்லாத வாழ்க்கையாக அமையலாம். ‘சூப்பரா செட்டில் ஆயிட்டாம்பா’ என்ற பட்டப் பெயரும் உபரியாகக் கிடைக்கலாம்.

ஆனால், நம் திறமைக்கேற்ற பிடித்த படிப்பைப் படித்து, அதற்கேற்ற துறையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு வாழ்தல் என்பது ஒரு வரம். இதில் கிடைக்கும் மன நிம்மதியும், விரும்பியதைச் செய்கிறோம் என்கிற ஆத்ம திருப்தியும் இருக்கிறதே, அவை கோடிகோடியாகக் கொட்டினாலும் கிடைக்காது. இதைத்தான் ஒரு செயலைச் சிறப்பாக செய்வது என்கிறோம்.

வாழ்க்கை என்பது புள்ளிவைத்த கோலம் மாதிரி. புள்ளிகளை இணைத்து கோலம் போடுவது அத்தனை சுலபம் அல்ல. ஆர்வமும், திறமையும் இணைந்த ஒருவரால்தான் புள்ளிக் கோலத்தைக்கூட முழுமையாகப் போட முடியும். புள்ளிக்கோலத்தில் புள்ளிகளை வைத்த பிறகு ஏதேனும் ஒரு புள்ளியைத் தொடக்கமாகக் கொண்டு கோலம் போட ஆரம்பிக்க வேண்டும். அந்தத் தொடக்கப் புள்ளியைத் தேர்ந்தெடுக்கும் நுணுக்கத்தைக் கண்டுகொண்டால் கோலம் போடுவது சுலபம்.

நம் ஒவ்வொருவருக்கும் திறமையும் ஆர்வமும் ஒருங்கிணையும் ஒரு புள்ளி இருக்கும். அதைக் கண்டுபிடித்து விட்டால் நமக்கான பாதை எது என்பதை கண்டறிவது சுலபம்.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தின் மீது ஆசை, தீராத காதல், வெறி இருக்கும். அது எது என்று கண்டறிந்து அங்கே கவனத்தைச் செலுத்தி அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் ஜெயிப்பது சுலபம்.

இதன் மூலம் நல்ல வேலை கிடைக்குமா, நல்ல சம்பளம் கிடைக்குமா, நல்ல எதிர்காலம் இருக்குமா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஆனால், விரும்பியதை படிக்கிறோம் என்கிற திருப்தி இருக்கிறதே, அதற்குமுன் மற்ற காரணிகள் அத்தனையும் தூசிதான்.

சரி நமக்கான திறமையும் ஆர்வமும் ஒருங்கிணையும் ஒரு புள்ளி எது?

இதைக் கண்டுபிடிக்க ஒரு மிக எளிமையான வழி உள்ளது.

நம்மை நாமே இரண்டு கேள்விகள் கேட்டுக்கொண்டால் போதும். நமக்கான புள்ளி கிடைத்துவிடும்.

முதல் கேள்வி. ‘நான் எதையெல்லாம் செய்வதில் திறமைசாலியாக இருக்கிறேன்?’ பட்டியல் தயாரியுங்கள்.

அடுத்த கேள்வி. ‘நான் எதையெல்லாம் செய்ய விரும்புகிறேன் அல்லது எதிலெல்லாம் ஆர்வம் இருக்கிறது’ அடுத்த பட்டியலைத் தயாரியுங்கள்.

முதல் பட்டியலில் திறமை, இரண்டாவது பட்டியலில் ஆர்வம். இந்த இரண்டையும் தொகுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கான புள்ளி கிடைத்துவிடும்.

எப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதை சொல்கிறேன்.

கற்போம்… கற்பிப்போம்!

[படித்ததைப் பிடித்ததாக மாற்ற வேண்டுமா?](https://minnambalam.com/k/2019/02/15/9)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share