தொழில் அதிபர்கள் மற்றும், அரசியல் பிரமுகர்களுடன் டேட்டிங் செல்ல 30 ஆயிரம் ரூபாய் தருவதாக, சின்னத் திரை நடிகை ஜெயலட்சுமிக்கு, தொல்லை கொடுத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிவோம் சந்திப்போம், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சின்னத் திரை நடிகை ஜெயலட்சுமி. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் தனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அறிமுகம் இல்லாத சில நபர்கள் ஆபாசத் தகவல்களை அனுப்புவதாகவும், அதில் ஒரு தகவலில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் டேட்டிங் சென்றால் 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில், ஜெயலட்சுமியின் வாட்ஸ் அப் எண் மூலமாக சாதுரியமாகப் பேசி அண்ணா நகரில் உள்ள காபி ஷாப்பிற்கு அவர்களை போலீசார் வரவழைத்துள்ளனர். காபி ஷாப்பிற்கு வந்த கவியரசன், முருகபெருமாள் ஆகியோரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் இவர்கள் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த துணை நடிகை ஏஜெண்டுகள் எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து நடிகை ஜெயலட்சுமி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் எனது செல்போனுக்கு அடுத்தடுத்து 2 எண்களில் இருந்து வாட்ஸ் அப்பில் சில தகவல்கள் வந்தன. அதில் வெளியில் டேட்டிங் செல்லலாம் என்றும், அதற்காக எங்களிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்களது ஆலோசனை பேரில்தான் போலீசில் துணிச்சலுடன் புகார் அளித்தேன். போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்துக் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற நேரங்களில் எந்தப் பெண்ணாக இருந்தாலும் பயப்படாமல் தைரியத்துடன் அதனை எதிர்கொள்ள வேண்டும். நடிகை என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவு செய்வது சரியல்ல. எங்களுக்கும் குடும்பம் உள்ளது. மற்ற பெண்களை போலத்தான் நாங்களும். எனவே என்னைப் போன்ற நடிகைகளும் இதுபோன்ற பிரச்சனைகளை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.�,”