~நடிகைகள் என்றால் கேவலமா: சர்ச்சையில் ஸ்டாலின்!

Published On:

| By Balaji

நடிகர் ராதாரவி, நயன்தாரா பற்றி மோசமான வார்த்தைகளால் விமர்சித்தது கடந்த வாரம் சர்ச்சையானது. ராதாரவிக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இது தொடர்பாக அவரது சகோதரியும் நடிகையுமான ராதிகாவும் ராதாரவிக்கு எதிராக கருத்து தெரிவித்தார். உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் நடைபெற்று முடிந்த ஒரு வாரக் காலத்துக்குள் ஸ்டாலின் நடிகைகள் குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்காகத் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் ஸ்டாலின் ஆண்டிபட்டியில் மோடியை விமர்சித்துப் பேசினார். டெல்லியில் விவசாயிகள் சென்று போராட்டம் நடத்தியபோது மோடி அவர்களை அழைத்துப் பேசவில்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். “மோடி பெரும் பணக்காரர்களை, தொழிலதிபர்களை, அதுமட்டுமல்ல சினிமா நட்சத்திரங்களை அழைத்துப் பேசினார். நடிகர்களை அழைத்துப் பேசினார், கேவலம் நடிகைகளையும் அழைத்துப் பேசினார்” என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நடிகைகள் என்றால் கேவலமா, ராதாரவி நடிகைகள் குறித்து பேசும்போது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இவ்வாறு பேசலாமா என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினை டேக் செய்து, “ஸ்டாலின், நடிகைகள் குறித்த உங்களின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக நல்லுறவை நாங்கள் கொண்டுள்ளோம். உங்கள் தந்தையை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்தையும், உங்களையும் தாழ்த்திவிடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share