�
“மருத்துவர்களின் பிள்ளைகள் மருத்துவராகும் போது நடிகர்களின் பிள்ளைகள் நடிகராகக் கூடாதா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாலிவுட் நடிகர் சோனாக்ஷி சின்ஹா.
பிரபலமாக இருப்பவரின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த விவாதம் பாலிவுட்டில் பரவலாக இருக்கிறது. காஃபி வித் கரன் ஜோஹர் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்கனா ரானாவத் இதைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பலரும் இது குறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் திரைக்கு வந்த ‘ட்ராப்டு’ படத்தில் நடித்திருந்த ராஜ்குமார் ராவ் யாதவ் இது குறித்து, “ திறமை அல்லாதோருக்கு வாய்ப்பு கிடைப்பது தான் தவறு” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகளும், பாலிவுட் நடிகருமான சோனாக்ஷி சின்ஹா, “ மருத்துவரின் பிள்ளை மருத்துவர் ஆக வேண்டும் என்றால், அதில் யாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. வழக்கறிஞரின் மகள் வழக்கறிஞர் ஆக வேண்டுமென்றாலும் அப்படித் தான். ஆனால், நடிகர் ஒருவரின் பிள்ளை நடிகர் ஆக வேண்டுமென்றால் மட்டும் தான் எல்லோரும் அது குறித்து பேசுவார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
கங்கனா ரானாவத் நடித்த ‘க்வீன்’, டாப்ஸி பன்னு நடித்த ‘பிங்க்’ படம் போல முற்போக்கு நோக்கம் உடைய எந்தப் படங்களிலும் பணியாற்றாமல், முழுக்க முழுக்க மசாலாவான (‘ரவுடி ரத்தோர்’, ‘டபங்’, ‘ ஆக்ஷன் ஜாக்சன்’) படங்களில் மட்டுமே நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா என்பதும் கவனிக்கத்தக்கது.�,