– தஞ்சையில் எழும் விவாதம்
புதிய பார்வை ஆசிரியரும், தமிழ் ஆர்வலருமான நடராஜனின் உடல் சென்னையில் இருந்து இன்று (மார்ச் 20) பிற்பகல் தஞ்சைக்குத் தன் பயணத்தைத் தொடங்கியது. தஞ்சாவூரில் உள்ள அருளானந்தா நகரில் நடராஜனுக்கு பங்களா இருக்கிறது. இன்றிரவு தஞ்சை கொண்டு செல்லப்படும் நடராஜன் உடல் அருளானந்த நகரில் இருக்கும் அந்த பங்களா வீட்டில் வைக்கப்படுகிறது.
நாளை (மார்ச் 21) மதியம் அருளானந்த நகரில் இருந்து புறப்படும் இறுதி ஊர்வலம் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் நடராஜனின் சொந்த ஊரான விளார் கிராமத்தில் இருக்கும் நடராஜனின் பண்ணை வீட்டுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அங்கேதான் நடராஜன் அடக்கம் செய்யப்படுவார் என்பதுதான் இப்போதைய தகவல். இதற்காக சசிகலா இன்று மதியம் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து புறப்பட்டு இன்றிரவு தஞ்சை வந்தடைகிறார்.
இந்நிலையில், நடராஜனின் உடலை அவர் கண் போல் காத்து வளர்த்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று தஞ்சையில் குரல்கள் எழுந்துவருகின்றன. அதே நேரம், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடராஜனை அடக்கம் செய்ய எதிர்ப்பும் நிலவி வருகிறது என்கிறார்கள் தஞ்சை வட்டாரத்தில்.
இதுபற்றி முள்ளிவாய்க்கால் முற்றம் நிர்வாகக் கமிட்டியில் இடம்பெற்ற சிலரிடம் பேசினோம்.
‘’2009இல் ஈழப் பேரழிவுக்குப் பின் அந்தத் தியாகத்தின் சின்னம் தமிழகத்தில் இடம்பெற வேண்டும் என்று பழ.நெடுமாறன் ஒரு பெரிய விருப்பம் வைத்திருந்தார். அதை நிறைவேற்ற முழு முதல் காரணமாக இருந்தார் நடராஜன். தஞ்சை விளார் சாலையில் இடம், முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கட்டுவதற்கு உண்டான செலவுகளை ஏற்றுக் கொண்டார் நடராஜன்.
இந்த முற்றத்தின் முன்பக்கம் புறம்போக்கு நிலமிருந்தது. அதை உரிய அரசு அதிகாரிகளிடம் பேசிப் பராமரிக்கிறோம் என்ற உறுதிமொழி கொடுத்து அங்கே பூங்கா ஏற்படுத்தினார் நடராஜன். ஒரு கட்டத்தில் நடராஜன் மீது ஜெயலலிதாவுக்குக் கோபம் வந்தபோது இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்து, அந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தார் என்று நடராஜனைக் கைது செய்தார், முள்ளிவாய்க்கால் முற்றம் முகப்பையும் இடித்தார் ஜெயலலிதா.
தமிழர் அமைப்புகள் கூட்டம் நடத்த காவல்துறையினர் தீவிர கெடுபிடிகள் காட்டிவந்த நிலையில் பல்வேறு தமிழர் அமைப்புகளுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம்தான் முகவரியாக இருந்தது. இந்நிலையில் அந்த முற்றம் அமையக் காரணமாக இருந்த நடராஜனை முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று தமிழார்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்போது முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிர்வாகம் பழ. நெடுமாறனிடம்தான் உள்ளது. நடராஜன் இடம், பொருள் உதவியெல்லாம் செய்திருந்தாலும் ஆவணங்கள் எல்லாம் நெடுமாறன் பெயரில்தான் இருக்கின்றன. எனவே நடராஜனை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அடக்கம் செய்வது குறித்து நெடுமாறன்தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்று கூறினார்கள்.
இதுபற்றி நாம் பழ. நெடுமாறனைத் தொடர்புகொண்டு பேசினோம். “இல்லை. நடராஜன் அவர்களின் அடக்கம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இல்லை. அவரது சொந்த கிராமமான விளாரில்தான் நடைபெறுகிறது’’ என்று தெரிவித்தார்.
**-ஆரா**�,