டி.எஸ்.எஸ்.மணி
இந்தியா முழுவதுமுள்ள கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1967ல் தொடங்கிய, நக்சல்பாரி உழவர் புரட்சி” யில் ஈர்க்கப்பட்டார்களே ஏன்? தாங்கள் படிக்கும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காது. தாங்கள் கற்கும் “தொழிற் கல்வியான பொறியியல் படிப்பு மகத்தான எதிர்காலத்தை தங்களுக்கும் தங்கள் நாட்டிற்கும் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் கற்க வந்தோம். எதிர்காலம் சூன்யமாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன?” என்று அவர்கள் சிந்தித்தார்கள். இந்தியாவில் இருக்கும் கிராமங்களில் நிலங்களின் உடமை முழுமையாக பண்ணையார்கள் கைகளில் இருக்கிறது. நிலவுடமை உற்பத்தி உறவுகளே இங்கே தீர்மானிக்கும் நிலையில் இருந்த சூழல். அதன் விளைவாக, முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் வளர முடியாத நிலை. ஆகவே நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை தகர்த்தெறிவதே முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் வளர்வதற்கு வழி வகுக்கும். இந்த பொருளாதாரத் தத்துவத்தை புரிந்துகொண்ட, கல்லூரி குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொழில்கள் வளர்வதற்கு தடையாக உள்ளது நிலப்பிரபுத்துவ சமூகம்தானே என்று உணர்ந்ததால், அதைத் தகர்க்க, நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்கள்.
அன்றைய சூழலில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் பிரசிடென்சி (மாநிலக்) கல்லூரி, ஜதாவ்ப்பூர் பல்கலைக் கழகம், மத்திய மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக நக்சல்பாரி அரசியலை ஏற்றுக் கொண்டார்கள். ராணுவத்தையும், துணை ராணுவத்தையும் எதிர்த்து கல்லூரி விடுதிகளில் இருந்து கொண்டே, மொலோடாவ் காக்டைல் போன்ற பெட்ரோல் குண்டுகளை வீசி மாணவர்கள் போர் புரிந்தார்கள். சாலைகளில் வைத்திருந்த காந்தி சிலைகளை உடைத்து, அந்த இடங்களில், சிப்பாய் கலக தளபதி மங்கல் பாண்டே போன்றோர் சிலைகளை வைத்தனர். நக்சல்பாரி கட்சியின் சிபிஐ (எம்.எல்) அதிகாரபூர்வ வங்காள மொழி ஏடான தேசப்பிரதியின் கடைசி பக்கத்தில், தோழர் சரோஜ் தாத்தா எழுதிய கட்டுரைகளின் வழிகாட்டல்படியே, ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வில், அத்தகைய சிலை உடைப்புகளில் மாணவர்கள் ஈடுபட்டார்கள். துர்காபூர் பொறியியல் கல்லூரி, பிராந்திய பொறியியல் கல்லூரி (ரீஜனல் எஞ்சினீரிங் காலேஜ்)யாக இருந்தது. இந்தியாவில் இருந்த பிராந்திய பொறியியல் கல்லூரிகள் அனைத்துமே நக்சல்பாரி சிந்தனையாளர்களின் கோட்டைகளாக மாறின. ஏனென்றால் அவை, மற்ற பொறியியல் கல்லூரிகளை விட அதிக முன்னேறிய தன்மையில் இயங்கி வந்தன. ஆகவே அங்கு படித்து வந்த மாணவர்கள், நாட்டின் வளர்ச்சியில் தீவிர அக்கறை கொண்டவர்களாக இருந்தனர்.
அத்தகைய தன்மை உள்ள துர்காபூர் பொறியியல் கல்லூரியில்தான், தோழர் வினோத் மிஸ்ரா பயின்றார். பின்னாளில் நக்சல்பாரி இயக்கத்திற்கே தலைமை ஏற்க வந்தார். அவரது வகுப்பு தோழர் ” பிரிஜ் பிஹாரி பாண்டே” இன்னமும் பிகார் மாநிலத்திலிருந்து வரும் நக்சல்பாரி கட்சியின் அதிகாரபூர்வ இந்தி ஏட்டின் ஆசிரியராக இருக்கிறார். ஆந்திராவில், வாரங்கல்லிலும்,உத்திர பிரதேசத்தின் கான்பூரிலும், கேரளாவின் திருச்சூரிலும், இருக்கும் பிராந்திய பொறியியல் கல்லூரிகள் (ஆர்.ஈ.சி) நக்சல்பாரி சிந்தனைகளின் நாற்றுக்களாக இருந்தன. கேரளாவின் திருச்சூர் ஆர்.ஈ.சி. யின் மாணவர் ராஜன், நாடகங்கள் மூலம் புரட்சிகரக் கருத்துக்களை விதைத்ததற்காக நெருக்கடி நிலையில், சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்.
அன்றைய சூழலில்தான் தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளும் நக்சல்பாரி புரட்சிகர கருத்துக்களைத் தாங்கிய மாணவர்களை உற்பத்தி செய்தன. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகம், கே.என்.கணேசன், குருலிங்கம், எஸ்.அனந்த கிருஷ்ணன், பி.டி.பழனியப்பன், சாக்ரடிஸ், மணி, பசுபதி போன்ற தலைமை மாணவர்களையும், கோவையில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரி (ஜிசிடி) தமிழரசன், ராகவன் போன்றோரையும், சி.ஐ.டி. என்னும் கோயம்புத்தூர் பொறியியல் கல்லூரி தேவேந்திரன், ருக்குமாங்கதன் போன்ற மாணவர் முன்னோடிகளையம், நக்சல்பாரி இயக்கத்திற்கு தந்தது. அதில் தொடர்ந்து புரட்சிகர பயணத்தில் இருந்தவர்கள் சிலர் மட்டும்தான்.. முக்கியமாக நன்னிலம் நடராசர் மகன் தோழர் கே.என்.கணேசன், பெண்ணாடத்தில் புலவர் கலியப்பெருமாளின் சவுந்திரசோழபுரம் தோட்டத்தில், வெடி செய்யும்போது நடந்த விபத்தில் இறந்த பிறகு, தோழர் தமிழரசன் தனது புரட்சிகர பயணத்தில் சளைக்காமல் தொடர்ந்தார். அப்போது, சாரு மஜூம்தாரின் வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பு செய்யும் பாதையே மேலோங்கி நின்றது.
தோழர் தமிழரசன் நடத்தியதாக சில “பண்ணையார்கள் அழித்தொழிப்புகளை” பட்டியலிட்ட காவல் துறை அவரை இரத்தக் காட்டேரி என்றே முத்திரை குத்தி அழைத்தனர். ஆனால், பழகுவதற்கு எளிமையானவராகவும் பாசமுள்ள தோழராகவும் உறுதியான கொள்கைக்காரராகவும் அவர் பழகிய தோழர்களுக்கும், மக்களுக்கும் அவர் என்றும் வாழ்ந்து வந்தார். காவல்துறையின் ” கட்டுக் கதைகளை” மக்கள் நம்புவதாக இல்லை. கிராமம், கிராமமாக அவர் பணியாற்றிய பகுதிகளில் எல்லாம் அவருக்கு அனைத்து சாதி மக்கள் மத்தியிலும் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது.முந்திரிக் காடுகளில் உழைக்கும் விவசாயிகளுக்கு, அவர் ஒரு விடுதலை வீரராகத் திகழ்ந்தார்.
சாரு மஜூம்தாரின் அழித்தொழிப்பு வழியால் மட்டுமே புரட்சிகர இயக்கத்தை வழி நடத்த முடியாது என்று எண்ணி, “கூட்டக் குழு” என்ற செயல் தந்திரத்தை தோழர் தமிழரசன் முன்வைத்தார். புரட்சிகரக் கட்சியில் மேற்கு மாவட்டக் குழுவைச் சேர்ந்தவர்களான கனிபாய் போன்றோர் “வெகு ஜன வழி” என்றும், தோழர்கள் தமிழரசன், தமிழ்வாணன், கலிய பெருமாள், சுந்தரம் போன்றவர்கள் “கூட்டக் குழு” வழி எனவும், காரைக்குடி தோழர் பழனியப்பன், சென்னை தாத்தா எனும் தோழர் பாண்டியன், போன்றவர்கள்,”சாரு மஜூம்தார் வழி” எனவும் பிரிவுகள் உருவாகின.
கொண்டபள்ளி சீதாராமையா தலைமையிலான ” மக்கள் யுத்தம்” குழுவின் கீழ் செயல்பட்ட தமிழ்நாட்டு பிரிவு ஏ.எம்.கோதண்டராமன் தலைமையில் இருந்தாலும், தோழர் தமிழரசனின் வழிகாட்டலில் சென்னை கோடம்பாக்கத்தில், முற்போக்கு மாணவர் அணி (ஆர்.எஸ்.யு) முயற்சியில், நாடெங்கும் உள்ள அனைத்து புரட்சிகர மாணவர் இயக்கங்களும் கலந்து கொண்ட,தேசிய இன விடுதலை கருத்தரங்கு நடத்தப்பட்டது. சாரு மஜூம்தார் வழி வந்த தோழர் வினோத் மிஸ்ரா தலைமையிலான தமிழ்நாட்டு பிரிவினரும், ஜனநாயக மாணவர் சங்கம் (டி.எஸ்.எப்.) என்ற பெயரில் அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
அந்த நேரத்தில் ஈழப் போராட்டத்திற்கான, “போராளி குழுக்கள்” தமிழ்நாட்டில் பயணித்து வந்த நேரம். அத்தகைய தாக்கமும் இங்குள்ள புரட்சிகர அரசியலில் இருந்தது. அதையொட்டி தோழர் தமிழரசன் தேர்ந்தெடுத்த பாதைதான், “தமிழ்நாடு விடுதலை” என்ற பாதை. பொன்பரப்பியில், கையில் தானிசை துப்பாக்கியான ஏ.கே.47 இருந்தும் கூட, “மக்கள் மீது சுட்டு விடக் கூடாதே” என்பதற்காகவே, துப்பாக்கி விசையைத் தட்டாத தோழரின் செயல் கடைசியில் அவரது உயிரைக் குடித்த நிகழ்வாகப் போனது. காவல்துறையின், “ஊடுருவல் தந்திரம்” தோழர் தமிழரசனின் உயிரை குடித்தது என்ற கருத்துதான், தோழர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. , .
நான் தலைமறைவாக இருந்த காலத்தில்,தோழர் தமிழரசன், பிணையில் சென்னையில் இருந்த நேரத்தில் அவரை சந்தித்து வேறுபாடுகளை பற்றி பேசித் தீர்க்க நான் எண்ணினேன். அதற்கு தோழர்கள் அறிவியல் ரீதியாக செய்து தந்த ஏற்பாட்டில், அரசின் கழுகுக் கண்களுக்கு படாமல் தோழரை ஒரு தொழிலாளர் குடியிருப்பிற்கு வரவழைத்து சந்தித்து உரையாடினேன், மணிக்கணக்காக எங்கள் உரையாடல் நடந்தாலும் ஒரு முடிவுக்கு அது வரவில்லை. வேறுபட்ட கருத்துக்களுடன் தோழர்களாகவே பிரிந்தோம்.
தோழர் தமிழரசன் மரணம் சம்பவித்த இந்த நாளின் ( செப்டம்பர் 1) தியாகம், பல படிப்பினைகளை தோழர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிராக நிற்கும் அரசு இயந்திரத்திற்கும் கூட கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
வர்க்கப்போராட்டமா? தேசிய இன விடுதலையா? எது முக்கிய முரண்பாடு என்ற பகுப்பாய்வில், நான் முரண்பட்டாலும், தோழர் தமிழரசனுடன் பழகிய காலங்களில், நடத்திய விவாதங்களில், இருவரும் எதிர்கொண்ட அரசு இயந்திரத்தின் சக்கரங்களின் பற்களை எதிர்கொண்ட விதத்தில், அனுபவங்கள், படிப்பினைகள் ஏராளம். அவை அவர் இந்த நாட்டிற்கு விட்டுச் சென்றுள்ள கொடைகள். சிவப்பு வணக்கம் தோழரே…
**
மேலும் படிக்க
**
**[ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!](https://minnambalam.com/k/2019/08/31/67)**
**[டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!](https://minnambalam.com/k/2019/08/31/26)**
**[நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?](https://minnambalam.com/k/2019/08/29/33)**
**[லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/08/30/63)**
**[டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!](https://minnambalam.com/k/2019/09/01/20)**
�,”