திருச்சி லலிதா ஜுவல்லரியில் நேற்று முன்தினம் அக்டோபர் 2ஆம் தேதி, அதிகாலை 3.00 மணியளவில் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பளவில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கியக் குற்றவாளிகளை நெருங்கிவிட்டனர் போலீஸார்.
கொள்ளை நடந்த மறுநாளான நேற்று அந்தக் காட்சிகள் அடங்கிய சிசிடிவி ஃபுட்டேஜுகளும் வெளியானது. இந்நிலையில் திருவாரூர் முருகன் தலைமையில் எட்டுபேர் கொண்ட டீம்தான் லலிதா ஜுவல்லரி மாளிகையின் சுவரில் ஓட்டைபோட்டு நவீனமான முகமூடிகளை அணிந்து கொண்டு இருவர் மட்டும் உள்ளே நுழைந்து கொள்ளையடித்துவிட்டு தப்பித்தார்கள் என்று தெரியவந்துள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதி காலையில் தகவல் கேள்விப்பட்ட உரிமையாளர் கிரண் குமார் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி காரில் புறப்பட்டவர், சென்னையில் உள்ள முக்கிய காவல் துறை அதிகாரிக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, முக்கிய அரசியல் பிரமுகர்கள் இருவருக்குத் தகவல் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டார்.
சென்னை காவல்துறை அதிகாரிகள் திருச்சி காவல்துறை ஆணையர் அமல்ராஜ்க்கு தகவல் சொல்லிப் பார்க்கச் சொன்னதும், அவசரமாகப் புறப்பட்டுக் கடைக்குச் சென்றார். கடையைச் சுற்றிப் பார்வையிட்டவர், கீழ்மட்ட அதிகாரிகளிடம் ஏன் எனக்குத் தகவல் சொல்லவில்லை என்று கேட்டுள்ளார். ‘எங்களுக்கே தெரியவில்லை சார், லோக்கலில் புகார் கொடுக்காமல் சென்னையிலிருந்து ஆபரேட் செய்கிறார்கள் ’ என்ற வருத்தமாகச் சொல்லியுள்ளார்கள்.
உடனே திருச்சி மாநகர காவல்துறையின் க்ரைம் பிரிவு துணை ஆணையர் மயில்வாணன், கை ரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய்களோடு தனது சிறப்பு டீமுடன் விசாரணை களத்தில் இறங்கினார்.
மாநகராட்சியில் பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கேமராக்கள் மற்றும் தனியார் கடைகள் ,வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தார்.
இதனிடையில் காவல் துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் ரூரல் ஐஜி இருவரும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் அலர்ட் செய்தார்கள்.
இந்த நிலையில் மீடியாக்கள் வடமாநிலத்தார் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று செய்திகளைப் போட்டு திசை திருப்பியதால் போலீஸ் டீம் டென்ஷன் ஆனது. வேறு வழியில்லாமல் மேல் அதிகாரிகளும் வடமாநிலத்தார்கள் தங்கியிருக்கும் இடங்களைச் சோதனைகள் செய்யுங்கள், விசாரியுங்கள் என்றதும் சாலையோரத்தில் வியாபாரம் செய்தவர்கள், குடியிருந்த வடமாநிலத்தார்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தார்கள்.
ஆனால் மயில்வாணன் மட்டும். ‘வடமாநிலத்தார்களை மட்டும் குறிவைத்துப் பார்க்காதீர்கள் தமிழ்நாட்டுக்காரர்களையும் குறிவைத்துத் தேடுங்கள்’ என்றவர், செல்போன் டவர் லொக்கேஷன், கால் டீட்டெய்ல்ஸ் என ஒன்று விடாமல் ஆராய்ந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில்தான் திருவாரூர் முருகன் என்பவர் மீது சந்தேக நிழல் படிந்தது. திருவாரூர் எஸ்.பி.துரை நேற்று மாலை 4.30 மணிக்கு அனைத்து இன்ஸ்பெக்டர்களுக்கும் மைக்கில் பேசினார். ‘ உங்கள் பகுதியில் தீவிரமாக வாகனங்களைச் சோதனை செய்யுங்கள், சந்தேகப்படும்படி யாராவது தெரிந்தால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துவிடுங்கள்’ என்று உத்தரவிட்டார்.
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் நகரத்திற்கு உள்ளே நுழையும் பகுதியில் வெட்டாறு அருகில் டவுன் போலீஸ் ஸ்டேஷன், சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு டீம் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேற்று மாலை 5.30 மணிக்கு, ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் வண்டியில் இருவர் வந்தார்கள்.
அந்த வண்டியை நிறுத்தி விசாரித்தபோது லோக்கல்தான் சார், பக்கத்து ஊருக்கு போய்விட்டு வருகிறோம் என்று தெளிவாகப் பதில் சொன்னவர்கள், அவர்கள் வைத்திருந்த பேக்கை பார்த்த எஸ்.ஐ க்கு சந்தேகம் அதிகமாகியுள்ளது, காரணம் அவர்கள் வைத்திருந்த பேக் அமெரிக்க டூரிஸ்ட்டர் பிராண்ட் என்பதால், அது காஸ்ட்லி பேக்.
’சரி இறங்குங்கள் பேக்கில் என்ன இருக்கிறது’ என்று கேட்டதும், எதிர்பாராத வகையில் வண்டியை போட்டுவிட்டுத் தப்பித்து ஓடினார்கள், எஸ்.ஐ பாரத நேரு விடாமல் விரட்டி சென்று வெட்டாற்றில் இறங்கி மணிகண்டனை மட்டும் பிடித்துவிட்டார் மிகத் திறமையாக.
உடனே மைக்கில் தகவல் சொன்னதும் போலீஸ் வந்துவிட்டார்கள், மணிகண்டனை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தபோது, பேக்கிலிருந்த தங்க நகைகளைப் பார்த்து மேல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என்று தெரிந்து திருச்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததும் துணை ஆணையர் மயில்வாணன் இரவே திருவாரூர் சென்றுவிட்டார்.
விசாரணையில் மணிக்கண்டனுடன் வந்தவன் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது, மேலும் ஒருவரைப் பிடித்து தனியார் விடுதியில் வைத்து விசாரித்து வருகிறார் மயில்வாணன்
முதல்கட்ட விசாரணையில் திருவாரூர் முருகன் தலைமையில் எட்டுபேர் கொண்ட டீம் ஈடுபட்டதாகவும் அதில் ஐந்து நபர்கள் அடையாளம் தெரிந்துள்ளதாகவும் சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
முருகன் என்றவன் வங்கிக் கொள்ளையில் பெயர்போனவன். பெரும்பாலும் கூட்டுறவு வங்கியில்தான் சுவரில் ஓட்டைபோட்டு கொள்ளையடிப்பான். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கோட்டம் கிள்ளை லிமிட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் 2012 ஆம் ஆண்டில் கொள்ளையடித்தான். அப்போது ஏ.எஸ்.பியாகவிருந்த துரை கண்டுபிடித்து ரெக்கவரி செய்தார் அவர்தான் தற்போது திருவாரூர் எஸ்.பி. யாக இருக்கிறார்.
அதேபோல் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்தவன் பிற மாநிலங்களிலும் கை வரிசையைக் காட்டியுள்ளான். இந்த முருகன் சுவரில் ஓட்டைபோட்டு கொள்ளையடிப்பதில் கில்லாடி என்கிறார்கள் காவல்துறையினர்.
லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கக் கடந்த ஒரு மாதமாக நோட்டமிட்டு ட்ரையல் பார்த்துள்ளான். கொள்ளையடித்ததில் பங்குபோட்டுள்ளதையும், கொள்ளையில் ஈடுபட்டவர்களையும் மயில் வாணன் டீம் நெருங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் திருச்சி காவல்துறையினர்.
முருகனுடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் போலீஸாரில் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
�,”