நகர நக்சலைட்டுகள்: மீண்டும் பரவும் கவுரி லங்கேஷ் பேச்சு!

public

சமீபத்தில், மாவோயிஸ்டுகள் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீ2 நகர நக்சலைட்டுகள் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் பயன்படுத்துவது அதிகமாகியுள்ளது. இந்த விவகாரம் பற்றி விவாதங்கள் பெருகியுள்ளன.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில், கவுரி லங்கேஷ் பேசிய வீடியோவொன்றை வெளியிட்டுள்ளது ஸ்கோரால்.இன் இணையதளம். “அரசும் காவல் துறையும் நக்சலைட்டுகள் என்று யாருக்கு முத்திரை குத்துவார்கள். மக்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, சிறுபான்மையினர், தலித் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்” என்று அந்த வீடியோவில் கவுரி லங்கேஷின் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.

“கயிர்லாஞ்சியில் தலித் பெண் சுரேகா கொல்லப்பட்டபோது, அவரை அரசும் காவல் துறையும் நக்சலைட் என்று முத்திரை குத்தியது. இதை எதிர்த்துப் போராடிய தலித் மக்களையும் நக்சலைட்கள் எனக் கூறியது மகாராஷ்டிரா அரசு. போராட்டக்காரர்களை லத்தியால் தாக்கினர் போலீஸார்.

அம்பேத்கர் சிலையை உடைத்தாலும், அதற்குப் போராட்டம் நடத்த யாரும் செல்லாதீர்கள். அப்படிச் சென்றால், உங்களையும் நக்சலைட்டுகள் என்று கூறுவார்கள். நக்சலைட் இயக்கம் அல்லது இனவாத ஒற்றுமை மன்றம் பற்றிய விழிப்புணர்வு, ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இல்லை. சமாதான மன்றத்திற்கான பிரதிநிதியாக, நான் வன்முறையை எதிர்க்க முடியாது. ஆந்திராவின் பாதையை கர்நாடக மாநிலம் பின்பற்றக்கூடாது என்று கூறினால், நானும் அவர்கள் கண்களுக்கு நக்சலைட்டாகத் தான் தெரிவேன். இன்றைய ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகியன மாநில அரசு மற்றும் கட்சிகளின் கைப்பாவையாகச் செயல்படுகின்றன” என்று அந்த வீடியோவில் கவுரி லங்கேஷின் பேச்சு இடம்பெற்றுள்ளது.

இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த வாரம் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இது மத்திய அரசின் அடக்குமுறை என்று எதிர்ப்பு எழுந்த நிலையில், நக்சலைட்டுகள் முத்திரை யார் மீது விழும் என்ற கவுரி லங்கேஷின் பேச்சு மீண்டும் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *