�தோல்வி பயத்தில் தற்கொலை செய்துக் கொண்ட பனிரெண்டாம் வகுப்பு மாணவன் தேர்வு முடிவில் பள்ளி அளவில் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.
கிருமாம்பாக்கம் பகுதி கன்னியக்கோவில் புதுநகரை சேர்ந்த சக்திவேலு என்பவரது மகன் மணிகண்டன்(18) பாகூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பனிரெண்டாம் வகுப்பு படித்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் இவரது குடும்பத்தினர் மணிகண்டனிடம் எவ்வளவு மதிப்பெண் எடுப்பாய் என்றும் மேற்கொண்டு என்ன படிக்க இருக்கிறாய் என்றும் கேட்டுள்ளனர். ஆனால் தோல்வி பயத்தில் இருந்த மணிகண்டன் தான் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வது என எண்ணி கடந்த மே-9 ஆம் தேதி தனது வீட்டின் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
நீண்ட நேரம் வெளியே வராததால் அவரது தந்தை ஜன்னல் வழியே பார்த்த போது அவர் தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து புதுவை அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே-12 ஆம் தேதி வெளியானது. அப்போது தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் மணிகண்டன் 1095 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.மேலும் பள்ளி அளவில் 4-வது இடத்தையும் பிடித்திருந்தார்.
இந்த சம்பவம் ஆசிரியரகள் மற்றும் சக மாணவ மாணவிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த மாணவனின் பெற்றோர் இதுபோன்று இனி யாரும் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டாம் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.�,