?தோனியின் ஓய்வு எப்போது?

Published On:

| By Balaji

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டனாக வலம்வந்த மகேந்திர சிங் தோனி, 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் தொடர்ந்து நீடித்துவந்த அவர் தற்போது மோசமான ஃபார்ம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில் தற்போது அவரது ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், இது தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை என்னிடம் இல்லை. தேர்வுக் குழுவினர் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்வதற்கு முன்பு நான் எதுவும் பேச விரும்பவில்லை. தோனி அனைத்து விதமான கிரிக்கெட்டுக்கும் ஏற்ற நபர் என்பதை மறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியைப் பொறுப்புடன் வழிநடத்தி வந்துள்ளார். அதனால் இந்த ஓய்வு முடிவு அவரிடமே உள்ளது. நீண்ட நாள் அணிக்காக விளையாடிய ஒருவருக்கு அணியிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். எனவே அவர் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத இளம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், “முந்தைய ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடும்போது தற்போதைய அணி சற்று அனுபவம் குறைந்ததாகவே இருக்கிறது. இதனால் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அவர்களிடம் அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள் நிச்சயம் இருக்கின்றனர். ஆனால், தற்போதைய அணியில் அவர்கள் இல்லை. அதற்காக இப்போது உள்ள ஆஸ்திரேலிய அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் பொதுவாகவே போர்க் குணம் கொண்டவர்கள். அதனால் அவர்கள் இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களுக்குச் சவால் அளிப்பதும் எளிதான ஒன்றல்ல” என்று கூறியுள்ளார்.

விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்துப் பேசிய சச்சின், “அவர் தற்போது கடுமையான ரன் பசியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் கோலியிடம் அதிகம் உள்ளது. அப்படி இருந்தால் மட்டுமே இத்தகைய சாதனைகளை நிகழ்த்த முடியும்” என்று கூறியுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share