தொழில்நுட்பம் மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பின் மூலம் அனைத்து வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறுகையில், “நெல்லை மாவட்டத்தில் உள்ள 2,979 வாக்குச்சாவடிகளின் புவிசார் குறியீடான தீர்க்க ரேகை மற்றும் அட்சரேகை அளவுகளைப் பயன்படுத்தி தேசிய தகவல் மையத்தின் புவிசார் தகவல் அமைப்பின் மூலம் வாக்குச்சாவடிகளின் புவியியல் தகவலை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இது முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆண்,பெண் வாக்காளர் எண்ணிக்கை உள்ளிட்ட அடிப்படையான முக்கிய விவரங்களைத் தேர்தல் அலுவலர்கள் புவியியல் வரைபடமாக எளிதில் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் பேசுகையில், “நெல்லை மாவட்டத்தில் இதுவரை 1 கோடியே 20 லட்சத்து 76 ஆயிரத்து 360 ரூபாயும், 148 கிராம் தங்க நகையும் பறிமுதல் செய்துள்ளனர் பறக்கும் படையினர். 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் இதுவரை 185 அழைப்புகள் வந்துள்ளன. சி-விஜில் செயலி மூலம் 54 பேர் புகார் அளித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share