தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த வேண்டுமென்று தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரியும், தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வராய்ச்சி நடத்தக் கோரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜர் என்பவர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தார். இது போன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வராய்ச்சி நடத்த உத்தரவிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை நேற்று (மார்ச் 11) நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏரல் அருகேயுள்ள சிவகளை பகுதியில் அடுத்த ஆண்டு அகழ்வராய்ச்சி மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். திண்டுக்கல் அருகே பழமையான சின்னங்கள் இருந்தாலும், அந்த பகுதிகளில் குடியிருப்புகளும் விளை நிலங்களும் அதிகளவில் உள்ளது என்று தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பூமியின் அடிபரப்பில் தொல்லியல் பொருட்கள் உள்ளதா என்பதை ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தி ஏன் கண்டறியக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழகத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை, அறிவிக்கப்படவுள்ளவை, அகழ்வராய்ச்சி நடைபெறவுள்ள இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர். அந்த இடங்களில் தொல்லியல் துறை சார்பில் தகவல் பலகை வைக்கவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
�,