தொப்பி என்றாலே எம்.ஜி.ஆர்.தான் : நவநீதகிருஷ்ணன் எம்.பி.!

Published On:

| By Balaji

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். அதிமுக தரப்பில் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்று கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சசிகலா ஆதரவு அதிமுக சார்பாக ஆர்.கே.நகரில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகன் போட்டியிடும் நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை தற்காலிகமாக முடக்கிவைத்து உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் முடிவு தங்களது வெற்றியை எந்தவகையிலும் பாதிக்காது என்று தினகரன் தரப்பில் கூறிவருகின்றனர். இதுகுறித்து, தினகரன் ஆதரவாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ‘சின்னம்மா தலைமையில் இயங்கிவரும் எங்கள் அணிதான் உண்மையான அதிமுக. இது, தேர்தல் ஆணையத்துக்கும் தெரியும். ஆணையத்திடம் இதுதொடர்பான ஆதாரபூர்வ தகவல்கள் அனைத்தையும் அளித்தோம். இருப்பினும் மெரிட் அடிப்படையில் இல்லாமல், சின்னத்தை முடக்கிவைத்து தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்துள்ளது. இது நடைமுறை சாத்தியங்களை யோசிக்காமல் வெளியிடப்பட்ட முடிவு. இருந்தாலும் இந்த முடிவை நாங்கள் ஏற்கிறோம். இரட்டை இலையை முடக்கிவைத்துள்ளதால், எங்கள் அணிக்கு எந்தவிதப் பின்னடைவும் கிடையாது. நாங்கள் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவது உறுதி’ என்றார்.

டெல்லியில், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த டாக்டர்.மைத்ரேயனைச் சந்தித்தது பற்றி கேட்டதற்கு, ‘நாங்கள் கொள்கைரீதியாக வெவ்வேறு கருத்தில் இருக்கிறோம். மற்றபடி, நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் நல்ல மதிப்புவைத்துள்ளோம். இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு பற்றி தேர்தல் ஆணையம் முடிவு வெளியிட்டுவிடும் என்றுதான் பேசிக்கொண்டிருந்தோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றபிறகு, இப்போது இருப்பதுபோல இரு அணிகளாகப் பிரிந்து இருக்க மாட்டோம். அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்றார் நவநீதகிருஷ்ணன்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் பன்னீர்செல்வம் அணியினருக்கு ‘இரட்டை மின்கம்பம்’ சின்னமும், தினகரனுக்கு தொப்பிச் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த தினகரன் தரப்பு, ‘தொப்பி’ சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவுசெய்துள்ளது. தொப்பிச் சின்னத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் பற்றி கூறிய நவநீதகிருஷ்ணன், தொப்பி என்றாலே தலைவர் எம்.ஜி.ஆர்-தான். அமெரிக்காவில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சமயத்திலும் அவரது தொப்பி எப்படி அவருக்கு வாக்கு சேகரித்துத் தந்ததோ அதேபோல, இந்த முறையும் கட்சியின் வெற்றிக்கு தொப்பிச் சின்னம் உதவியாக இருக்கும். எம்.ஜி.ஆரால்தான் அம்மா அரசியலுக்கு வந்தார். அதனால்தான் நாங்கள் தொப்பிச் சின்னத்தை தேர்ந்தெடுத்தோம்’ என்று கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share