iநடிகை ஸ்ரீதேவியின் புடவையை ஏலத்துக்கு விட்டு அதில் கிடைக்கும் பணத்தைத் தொண்டுப் பணிகளுக்காக வழங்க அவரது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடிகை ஸ்ரீதேவி துபாயில் உயிரிழந்தார். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று சென்னை சிஐடி நகரிலுள்ள போனி கபூர் இல்லத்தில் ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினி, இயக்குநர் ஹெச்.வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வரும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி, ஸ்ரீதேவியின் விருப்பமான புடவைகளில் ஒன்றை ஏலத்துக்கு விட்டு, அதில் கிடைக்கும் பணத்தைத் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும், அவரது குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.
ஏலம் நடத்துவதற்கு பரிசேரா இணையதளத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் தேர்வு செய்துள்ளனர். ஏலத்தில் புடவைக்கு ஆரம்ப விலையாக ரூ.40,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அவரது புடவைக்கு ரூ.60,000 விலை கேட்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலத்தில் கிடைக்கும் பணம் ‘கன்சர்ன் இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள், முதியோர், ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,