சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியின்போது பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் நினைவிடம் நோக்கி அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தவுள்ளார்.
இதற்காக ஒரு லட்சம் தொண்டர்களைச் சேர்க்கும் விதமாகத் தினமும் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பத்தாவது நாளாக ஆலோசனை நடத்தினார். பின்னர், நான் கலைஞரின் மகன், சொன்னதைச் செய்வேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பேரணி தொடர்பாக அழகிரி நேற்று (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர் கலைஞரின் 30ஆம் நினைவு நாளை முன்னிட்டு, அவரின் உண்மையான தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று செப்டம்பர் 5ஆம் தேதி காலை 10 மணியளவில், அண்ணா சிலை அருகில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை பேரணி சென்று அஞ்சலி செலுத்தவுள்ளோம்.
இப்பேரணியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரவுள்ள கலைஞரின் உடன்பிறப்புகள், சரியாக 10 மணியளவில் அண்ணா சிலை அருகே வர வேண்டும்.
பேரணியின்போது எந்தவித ஆரவார ஆர்ப்பாட்டமின்றி, பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பேரணியில் பங்கேற்க உள்ள நிலையில், கவனமாகப் பயணம் மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.�,