உள்நாட்டு விவசாயிகளைக் காக்கும் வகையில் பருப்பு இறக்குமதி மீதான தடை அடுத்த நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்ற ஏப்ரல் மாதத்தில் 67 லட்சம் டன் அளவிலான பருப்பு வகைகளை டிசம்பர் மாதத்துக்குள் இறக்குமதி செய்ய வர்த்தகர்களுக்கு அரசு அனுமதியளித்திருந்தது. இந்த நிலையில் இறக்குமதிக் காலம் நிறைவுபெறவுள்ள நிலையில் உள்நாட்டில் போதிய பருப்பு இல்லாததால் பருப்பு இறக்குமதிக்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறக்குமதி மீது அந்நிய வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் விதித்துள்ள தடை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் வர்த்தக அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர். பருப்பு இறக்குமதி மீதான தடையைத் தளர்த்தி சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் சென்னை உயர்நீதி மன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன. இதனால் பருப்பு இறக்குமதியை வர்த்தகர்கள் மேற்கொண்டனர்.
அரசு அதிகாரி ஒருவர் இதுகுறித்து *எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்திடம் பேசுகையில், “குறைந்தபட்ச ஆதரவு விலையை விட பருப்பின் சந்தை விலை மிகவும் குறைந்துள்ளது. அதேபோல, 11 லட்சம் டன் அளவிலான பருப்பு அரசு ஏஜென்சிகளிடம் இருப்பில் உள்ளது. எனவே இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீட்டித்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் தரவுகளின்படி, காரிஃப் பருவத்தில் பருப்பு உற்பத்தி 9.22 மில்லியன் டன்னாகும். இது சென்ற ஆண்டு உற்பத்தியான 9.34 டன் பருப்பை விடக் குறைவுதான். துவரம் பருப்பு உற்பத்தி 50 சதவிகிதம் வரையிலும், உளுத்தம் பருப்பு உற்பத்தி 25 சதவிகிதம் வரையில் இந்த ஆண்டில் குறையும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.�,