தொகுதி ஒதுக்கீடு: கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இன்று ஆலோசனை!

Published On:

| By Balaji

தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாகக் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை நடத்த இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்காகத் தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், தமாகா தலைவர் வாசன் இல்லத்தில் அவரை வேலுமணி, தங்கமணி ஆகியோர் நேற்று நேரில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து பேட்டியளித்த வாசன், கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை இன்று காலை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்தார். அநேகமாக அதிமுக – தமாகா இடையே இன்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே 39 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணல் நேற்று மாலை முடிந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இன்று (மார்ச் 13) ஆலோசனை நடத்துகிறது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் நாளை (இன்று) நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் கூட்டணிக் கட்சிகள் இடையிலான தொகுதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமாகா வருவது உறுதியாகிவிட்டதால் கூட்டணியை இறுதி செய்து அடுத்தகட்ட தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது அதிமுக. அதன் காரணமாகவே இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. கூட்டத்தின் முடிவில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share