தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுக: திமுக புகார்!

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகத் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தியும், அதிமுக சார்பில் காணை ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். திமுகவில் பொன்முடி தலைமையிலும், அதிமுகவில் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும் தேர்தல் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு இரு கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவினரின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் ஈடுபடுவதாக திமுகவின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகக் கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜாராமனிடம் நேற்று (செப்டம்பர் 29) திமுக சட்டத்திட்ட திருத்தக்குழுச் செயலாளர் பி.வில்சன், தலைமைக் கழக வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆகியோர் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.

அதில், “விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. ஆட்சியில் இருக்கும் கட்சியானது தேர்தல் காலத்தில் வாக்காளர்களின் மனத்தை மாற்றும் விதத்தில் தங்களது சாதனைகளை விளம்பரம் செய்வது தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை பாதிக்கும் என்பதால், அதற்குத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆனால், விக்கிரவாண்டியில் நீதிமன்றத்தை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உள்பட விழுப்புரம் தொகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டர் ஒட்டியதற்கான ஆதாரங்களையும் மனுவில் இணைத்துள்ள அவர்கள், “அனைத்து இடங்களிலும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை நீக்க வேண்டும். அதற்கான செலவுத் தொகையைச் சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூலிக்க வேண்டும். இடைத் தேர்தல் முடியும் வரை ஆளுங்கட்சியினர் அத்தகைய போஸ்டர்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும். பிரச்சாரம் தொடங்கவுள்ள நிலையில், இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share