கூட்டுறவு சங்கத் தேர்தல் குறித்த வழக்குகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையே விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கான பல கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 5ஆம் தேதி தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. வேட்புமனு தாக்கலில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டுமென திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தலுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அவசர வழக்காக விசாரிக்க வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த மனு கடந்த மாதம் 20ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்கி” நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு மட்டும் தடை விதித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (மே 7) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், “வாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்” என்று தமிழக அரசின் சார்பில் வாதம் எடுத்துவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக வழக்கறிஞர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் இன்று வரை முறைகேடு நடந்துகொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து நீதிபதிகள், “கூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கில் தலையிட முடியாது. கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடக்கிறதா என்பது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையே விசாரிக்க வேண்டும். வழக்கை விசாரித்து வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு விதித்த தடை தொடரும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.�,”