|தேர்தல் தேதி மாற்றம்: உச்ச நீதிமன்றம் மறுப்பு!

public

தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை மாற்ற வேண்டுமென்று கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று, கடந்த மார்ச் 10ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிட்டார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெரிய வியாழன் எனும் பண்டிகையைக் கொண்டாடவுள்ளதாகக் கூறி, சில கிறிஸ்தவ அமைப்புகள் தேர்தல் தேதியை மாற்ற வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தன.

பெரிய வியாழனன்று பள்ளிகளோடு இணைந்துள்ள தேவாலயங்களில் வழிபாடு நடத்தும் வகையிலும், தேர்தல் பணியில் ஈடுபட்ட கிறிஸ்தவ மக்கள் வழிபாடு செய்யும் வகையிலும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டுமென்று கிறிஸ்தவ அமைப்புகள் கூறி வந்தன. இதனைக் குறிப்பிட்டு கிறிஸ்தவ மக்கள் களம் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது, கடந்த 28ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டுமென்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இன்று (ஏப்ரல் 4) இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன்பாக நடைபெற்றது. புனித வெள்ளி, பெரிய வியாழன் அன்று பிரார்த்தனை செய்ய வேண்டியிருப்பதாலும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதாலும், தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டுமென்று மனுதாரர் வழக்கறிஞர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, புனித நாளன்று உங்களால் வாக்கு செலுத்த முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பியது. “புனிதநாள் என்பதால் வாக்களிக்க மாட்டேன் என்று கூறுகிறீர்களா? எப்படி பிரார்த்தனை செய்வதோ என்றோ, எப்படி வாக்களிப்பது என்றோ, நாங்கள் அறிவுரை கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தது. இதையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *