இந்தியாவின் தென்மாநிலங்களில் வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும், கறுப்புப் பணப் புழக்கத்தைக் கண்காணிக்கவும் உயர்மட்டக் குழுவொன்றை அமைத்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கிடையில், பல இடங்களில் பணம் பிடிக்கப்படுகின்றன. வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படலாம் என்ற எண்ணத்தில் அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தல் புலனாய்வுப் பல்துறைக் குழு என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் மத்திய நேரடி, மறைமுக வரிகள் ஆணைய உயரதிகாரிகள், வருவாய் புலனாய்வுத் துறை, பொருளாதாரப் புலனாய்வுத் துறை, நிதித் துறை புலனாய்வு உயரதிகாரிகள், எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் ரஜினிகாந்த் மிஸ்ரா, மத்திய ரிசர்வ் படை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பட்நாகர், தொழில் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் ராஜேஷ் ரஞ்சன், சாஸ்த்ர சீமாபால் இயக்குநர் ஜெனரல் தேஸ்வால், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இயக்குநர் ஜெனரல் அபய் குமார், ரயில்வே பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் அருண் குமார், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் நேரங்களில் எங்கு பணம் புழக்கம் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறதோ, அங்கு கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் இக்குழு ஈடுபடும். வங்கிகளில் தொடங்கி பணம் நடமாட்டம் இருக்கும் ஒவ்வோர் இடத்திலும் கண்காணிப்பு நடைபெறும். கடந்த மூன்று மாதங்களில் வங்கிகளில் மிகப்பெரிய பண முதலீடுகள், பணம் எடுத்தல் ஆகியவை குறித்து மூத்த வங்கி அதிகாரிகள் தகவல்களைச் சேகரித்து வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் அதிக அளவு பணம் புழங்குவதைக் கண்டறிந்துள்ளதாகவும், இந்த மாநிலங்களில் கண்காணிப்பு மிக அதிகளவில் இருக்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.�,