இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப் பதிவுகளும் முடிந்த நிலையில் நேற்று எக்சிட் போல் எனப்படும் வாக்குக் கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அவை அனைத்திலும் பாஜக கூட்டணியே பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்திருந்தன.
இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று (மே 20) வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“ராசி பலன், ஜோதிடப் பலன் கூறுவோர் வரிசையில் வாக்குக் கணிப்புகளும் ஒருவகை, அவ்வளவுதான். வெறும் வாயை மெல்லுவோருக்குக் கிடைத்த கொஞ்சம் அவல் ஆகும். இதைத் தடை செய்யவேண்டும்; அல்லது தவறாகப் போனால் அதற்குரிய பொறுப்பை வெளியிட்டவர்கள் ஏற்று, தண்டனைக்கு ஆளாக்கப்படல் வேண்டும்.
கடைசி நேரத்தில் வாக்களித்த பிறகு அவர்களிடம் திரட்டிய கருத்து (Exit Polls) என்று வெளியிடுவதுகூட சரியாகவே அமைவதில்லை. நமது (இந்திய) நாட்டின் தேர்தல் முடிவுகளில் எடுபடாத அப்பணியில் பல காலம் ஈடுபட்ட என்.டி.டி.வியின் நிறுவனரும், சிறந்த அரசியல் விமர்சகருமான பிரணாய் ராய், டோராப் ஆர்.சோப்ரிவாலா ஆகியோர் இணைந்து அண்மையில் இந்தியத் தேர்தல்கள் முடிவு ஆய்வுகளைப்பற்றி எழுதியுள்ள ஆங்கில நூல் ‘The Verdict – Decoding India’s Elections’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. அதில் பக்கம் 117 இல் ஒரு முக்கிய கருத்தை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
‘Exit Polls: In the last fifteen years of Lok Sabha elections, four out of every five (82 per cent) exit polls under-estimated the number of seats the largest party wins.’
அதாவது, ‘வாக்களித்துவிட்டு வெளியே வருபவர்களிடம் கருத்துக் கேட்டு, திரட்டப்பட்ட (சாம்பிள் சர்வே) கருத்துக் கணிப்புகளில் 5 இல் 4 பங்கு பெரிய கட்சியின் வெற்றிகளைக் குறைத்து மதிப்பிடுவதே வழமை யாகும்’ என்று சொல்கிறார்கள்” என சுட்டிக் காட்டியுள்ள கி.வீரமணி,
“இவை ஒருபுறமிருக்க, நமது நாட்டு தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை, அதன் சுதந்திரமான செயல் என்ற கருத்தை மாற்றிடும் வகையில் நிகழ்வுகள் அடுக்கடுக்காக நாளும் வந்து கொண்டுள்ளன. பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் அது மிகவும் சாதகமாக நடந்துகொள்கிறது என்று சாதாரணமான வர்களும்கூட எண்ணும்படி ஆகிவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் ஒருவரே, ‘பிரதமர் மோடி, அமித்ஷாமீது சட்டப்படி விதி மீறல் குற்றச்சாற்றுகளை மறுதலித்தது தவறு. அவர்கள் விதி மீறியுள்ளனர் என்ற தன்னுடைய கருத்தை ஏனோ பதிவுகூட செய்ய மறுத்திருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். எனவே, அதுபோன்ற கூட்டங்களை அவர் கூட்டினால், நான் அதில் பங்கேற்க மாட்டேன்’ என்று கூறுகிறார். மூன்று உறுப்பினர்களும், தலைமைத் தேர்தல் ஆணையர்களும் சம அதிகாரம் பெற்றவர்களே யாவார்கள்.
தற்போதுள்ள தேர்தல் ஆணையத்தினை மாற்றியமைக்க அதன் நம்பகத்தன்மை இழப்பு காரணமாக, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தக்க நேரத்தில் சட்டப் பரிகாரம் தேடிட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடவேண்டியது அவசியம், அவசரம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார் கி.வீரமணி.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”