தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும்: நீதிமன்றம்!
அரசியல் கட்சிகளின் அழுத்தமின்றி இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மறைவையடுத்து திருவாரூர் தொகுதிக்குக் கடந்த ஜனவரி 28ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் பூண்டி கலைவாணனும், அமமுக சார்பில் எஸ்.காமராஜும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுவந்த நிலையில், திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகக் கடந்த ஜனவரி 27ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு எதிராக திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்
இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதமானது. ஒரு தொகுதியில் நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்து செய்வதாக இருந்தால் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகே ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆனால் திருவாரூர் தொகுதியில், தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகுதான், மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எனவே, திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று (பிப்ரவரி 28) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை நடத்த ஏதுவான சூழல் இல்லை என்றால் தேர்தல் அறிவிப்பு வெளியானது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் அழுத்தமின்றி சூழலை ஆய்வு செய்து, தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மத்திய சட்டத் துறையிடம் தேர்தலை ரத்து செய்வது குறித்து ஜனவரி 29ஆம் தேதி ஒப்புதல் பெற்ற ஆணையையும், அதுதொடர்பான பதில் மனுவையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,