தேர்தல் ஆணையத்திடம் தமிழக பிஷப் கவுன்சில் கோரிக்கை!

Published On:

| By Balaji

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குத் தமிழக பிஷப் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

வரும் ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ரம்ஜான் பண்டிகை மாதத்தில் காலை முதல் மாலை வரை இஸ்லாமிய மக்கள் நோன்பிருப்பார்கள் என்பதால் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை வைத்தன. மேலும், ஏப்ரல் 8 முதல் 22 வரை மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் மதுரை தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் சார்பில் மற்றொரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதியன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்கு முன்பு ‘பெரிய வியாழன்’ தினம் ஏப்ரல் 18ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த நாளுடன் மக்களவைத் தேர்தல் நாள் மோதுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குத் தமிழக பிஷப் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 என ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 23ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை மாதத்தில் தேர்தல் நடைபெறுவது குறித்து இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை எழுப்பியதைத் தொடர்ந்து, ரம்ஜான் தினத்துக்கு மட்டுமே தேர்தல் தேதிகளிலிருந்து விலக்களிக்க முடியும் எனவும், முழு மாதத்துக்கும் விலக்களிக்க முடியாது எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share