வரும் மக்களவைத் தேர்தலில், பிஜு ஜனதா தள கட்சியில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.
2010ல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. இந்த மசோதாவுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்தாலும், தங்களது கட்சிகளில் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. கடந்த மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று ஒடிசாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், வரும் தேர்தலில் தனது கட்சியில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
117 சட்ட மன்றத் தொகுதிகளையும், 21 மக்களவை தொகுதிகளையும் கொண்ட ஒடிசா மாநிலம், மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் எதிர்க்கொள்ளவிருக்கிறது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 10) கேந்திரபாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் நவீன் பட்நாயக் மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அறிவித்துள்ளார்.
”மற்ற கட்சிகளும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைய பெண்களின் பங்களிப்பும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, நவீன் பட்நாயக் கட்சியில் சகுந்தலா லாகூரி ரீடா தாரை மற்றும் பிரத்தியுஷா ராஜேஸ்வரி சிங் ஆகிய மூவர் மட்டுமே பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
நவீன் பட்நாயக்கிற்கு முன்பே அவரது தந்தை பிஜூ பட்நாயக் அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார். 1990ல் பஞ்சாயத்து ராஜ் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியவர் பிஜூ பட்நாயக் என்பது நினைவுகூரத்தக்கது.
�,